
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சனா கானை ஞாபகம் இருக்கா..?
'வெச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சிக்குள்ளே' பாடலில் சிம்புவுக்கு செம டஃப் கொடுத்து ஆடுவாரே...அவரேதான்!
தமிழ் தெலுங்கு படங்களில் நடித்தவர், அப்படியே சில பாலிவுட் படங்களில் தலைகாட்டியதோடு, இந்தி பிக்பாஸ் பக்கம் கரை ஒதுங்கினார். கடைசியாக விஷால் நடித்த 'அயோக்யா' படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போனதோடு சரி.
'special ops' போன்ற வெப் சீரீஸ்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் குஜராத்தைச் சேர்ந்த முஃப்தி அனஸ் செய்யத் என்பவரை 2020-ல் திருமணம் செய்து கொண்டு கலை உலகிலிருந்து ஒதுங்கி விட்டார். முஃப்தி, இஸ்லாம் மத போதகராக இருக்கிறார். அவரை மணந்தபிறகு பர்தா அணிந்துதான் வெளியுலகுக்கு வர ஆரம்பித்தார் சனா.
சமீபத்தில் மும்பையில் நடந்த இஃப்தார் விழாவுக்கு தன் கணவர் முஃப்தியோடு வந்திருந்த சனா கான் மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார். கர்ப்பிணியாக இருக்கும் அவரை அவர் கணவர் முஃப்தி கிட்டத்தட்ட இழுத்துச் செல்வது போல இருந்த அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
''என்னதான் அவசரம்னாலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இப்படியா காட்டுமிராண்டித்தனமா இழுத்துட்டுப்போவீங்க?'' என முஃப்தியை ட்ரோல் செய்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள் நெட்டிசன்ஸ்.
இன்று மௌனம் கலைத்திருக்கும் சனா கான், ''ரசிகர்களாகிய சகோதர சகோதரிகளின் அன்புக்கு நன்றி. என் கணவர் என்னை வேகமாக கூட்டிச் சென்றது உண்மை தான். ஆனால், இழுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை. எனக்கு வியர்த்துக் கொட்டியதோடு எங்கள் காரின் டிரைவரைக் காணவில்லை. எனவே காரில் போய் உட்கார்ந்து ஏ/சி காற்றில் உட்கார்ந்து தண்ணீர் குடித்து ரிலாக்ஸ் பண்ணலாம் என்றுதான் வேக வேகமாக வெளியே வந்தோம். இப்போது அந்த வீடியோவைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கணவர் முஃப்தி இதுபற்றி வாய் திறக்காததால், இன்னும்கூட ஷோல்டரை ஏற்றியபடி முஃப்தியைத் திட்டித் தீர்க்கிறார்கள் சில நெட்டிசன்ஸ்!
- சமர்