'காதல் பிசாசே.. காதல் பிசாசே..' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 14

யுகபாரதியின் தோளில் கைவைத்த வித்யாசாகர், “நேத்து நான் உன்ன கடிஞ்சு பேசினதாலதான், இன்னைக்கி இவ்ளோ அருமையா பாடல் எழுதியிருக்க. இனிமே நான் மியூசிக் பண்ற எல்லா படத்துலயும் உன் பாட்டு இருக்கும்.” என்றார்.
சங்கீதம்
சங்கீதம் டைம்பாஸ்

காதல் பிசாசே… காதல் பிசாசே: ஒரு மோதலுக்கு பிறகு உருவான காதல் பாடல்

        இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இழக்க விரும்பாத விஷயம் என்ன? பணமா? பணம் சிலரிடம் இருக்கும். பலரிடம் இருக்காது. இருந்தால்தானே இழப்பதற்கு? இல்லையென்றால்…. உறவுகள்? உறவுகள் சிலருக்கு நல்லபடியாக அமையும். சிலருக்கு நல்லபடியாக அமையாமல் போகலாம். மோசமான உறவுகளை இழந்தால் யாரும் வருத்தப்படபோவதில்லை. காதல்? ஒரு காதலை இழந்தால் இன்னொரு காதல் கிடைக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு மனிதனும் அடைந்த, இழந்த… இழக்கப்போகும்…. மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத விஷயம்… இளமைதான். எல்லா மனிதர்களும் தான் இழக்கக்கூடாது என்று நினைக்கும் விஷயம் இளமைதான். இளமையின் அழகு, இளமையின் துள்ளல், இளமையின் ஆரோக்கியம்… இவை அனைத்தும் கடைசி வரையிலும் தன்னோடு வரவேண்டும் என்றே மனிதன் நினைக்கிறான்.

       ஆனால் இரக்கமே இல்லாத காலம், உங்கள் இளமைக்காலத்தை சட்டென்று தூக்கி வீசிவிடுகிறது. என் மீசையில் தெரிந்த முதல் நரைமுடியை கண்ணாடியில் பார்த்து அதிர்ந்துபோன வினாடி இன்னும் துல்லியமாக நினைவில் உள்ளது. என் மனைவி ஒரு முறை எனது நடுமண்டை சொட்டையை மொபைலில் புகைப்படம் எடுத்து என்னிடம் காண்பிக்க… மிகப்பெரிய துயரம் என்னை சூழ்ந்துகொண்டது. சட்டென்று அனைத்தும் கைவிட்டு போனது போல ஆகிவிட்டது.

சங்கீதம்
'கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 12

இந்த இழப்பிலிருந்து விடுபடவே ஆண்கள் டை அடித்து, ஜீன்ஸ், டீசர்ட் போட்டு முழங்கால் வலியை மறைத்துக்கொண்டு நடமாடுகிறார்கள். பெண்கள் குட்டைக் கை சட்டையுடன், இறுக்கமாக உடை அணிந்து இழந்துபோன இளமையை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள்.

       சாதாரண மனிதர்களாகிய நமக்கே இப்படி இருக்கிறது என்றால், நடிகர், நடிகைகள் தங்கள் இளமையை… அழகைத் தொலைக்கும்போது என்ன நடக்கும்? குறிப்பாக நடிகைகளின் மிகப்பெரிய அடையாளம்… அவர்களுடைய அழகு. நடிகைகளுக்கு வயதாகி,  தங்களுடைய அழகு குறித்த தன்னம்பிக்கை குலையும்போது பரிதவித்துப்போகிறார்கள். குறிப்பாக 40 வயதுக்குப் பிறகு நள்ளிரவில், ஒப்பனை அற்ற தங்கள் முகத்தை கண்ணாடியில் காணும் நடிகைகள் உள்ளுக்குள் கண்ணீர் வடிக்கிறார்கள். தங்கள் இளமையின் பொற்காலத்தில் நின்ற அழகின் பீடத்தின் மீது மீண்டும் ஏறி நின்றுவிட முடியாதா என்று தவிக்கிறார்கள்.  மீண்டும் நாம் அனைவரும் ரசிப்பதற்குரிய தேவதையாகிவிடமாட்டோமா என்று ஏங்குகிறார்கள்.

நாள் முழுவதும் வெவ்வேறு ஆடைகளை அணிந்து கண்ணாடியில் பார்க்கிறார்கள். தங்கள் இளமைக்காலத்தில் திரைப்படங்களில் நடித்தபோது கூட அளவான கவர்ச்சியுடன் நடித்தவர்கள், தற்போது மிகவும் குறைந்த ஆடைகளுடன் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். கவர்ச்சியான ஆடைகளுடன் தாங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் ஏற்றி கிடைக்கும் ஹாட்டின் சிம்பல்களைப் பார்த்து, தாங்கள் இன்னும் அழகோடுதான் இருக்கிறோம் என்று சமாதானம் செய்துகொள்கிறார்கள்.

       சமீபத்தில், தற்போது நாற்பது வயதாகிவிட்ட நடிகை மீரா ஜாஸ்மினின் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க நேர்ந்தது. பல புகைப்படங்களில் நெஞ்சுக்கு கீழ் இறங்கிய ஆடையுடன் கவர்ச்சியாக தோற்றமளித்த மீராவை ரசிக்கக்கூட முடியாமல், மனதிற்குள் வேதனையாகத்தான் இருந்தது. சினிமாக்களில் கூட அவர் அப்படி நடித்ததில்லை.

இது போன்ற புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் நடிகைகள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்களை ஒரு காலத்தில் ரசித்த ரசிகர்கள், அவர்கள் இன்று எப்படியான தோற்றத்தில் இருந்தாலும், தொடர்ந்து அதே ஆராதனை மனப்பான்மையுடன் அவர்களை ரசிப்பார்கள். ஏனெனில் இன்றும் என்னைப் போன்ற ரசிகர்களின் மனத்தில் இருப்பது, பொதுவிழாக்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக அறைகுறை ஆடைகளுடன் நடமாடும் இன்றைய நடிகை அல்ல. அந்த நடிகைகளுக்கு 80 வயதானாலும்,  ரசிகர்களின் மனதில் இருப்பது அவர்கள் ரசித்த அந்த நடிகைகளின் இளமைக்காலத் தோற்றம்தான்.

சங்கீதம்
'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

அப்படித்தான் இன்றும் என் மனத்திற்குள் இருப்பது… என்றும் மறையாத நிலவாக ஒளிரும் ‘கஸ்தூரி மான்’ மீரா ஜாஸ்மின்தான். கழுத்தில் கைவிரலை அழுத்திக்கொண்டு கலைஞர் போல் பேசிக் காண்பிக்கும் ‘சண்டைக்கோழி’  மீரா ஜாஸ்மின்தான்.

       நான் மீரா ஜாஸ்மினை அவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். லோகிததாஸின் மலையாள ‘கஸ்தூரி மான்…”(தமிழிலும் இதே பெயரில் வெளிவந்த இப்படம் தோல்வியைத் தழுவியது) படத்தை பார்த்ததிலிருந்தே நான் மீரா ஜாஸ்மினின் பரம ரசிகனாகிவிட்டேன். ஆர்ப்பாட்டமான இளமையும், குறும்பும், காதலும், கண்ணீரும் ததும்பும் மீரா ஜாஸ்மினின் அழகுக்காக டிவிடியில் அந்தப் படத்தை ஏராளமான முறை பார்த்திருக்கிறேன்.

       இப்படி ஒரு தேவதை அந்தப் படத்தில் நடித்திருக்கும் விஷயமெல்லாம் தெரியாமல், லோகிததாஸ் படம் என்பதற்காகத்தான் அந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படத்தின் ஆரம்பத்தில்,

ஒன் ப்ளஸ் ஒன்… டூ இஸ் மேத்ஸ்

ஒன் ப்ளஸ் ஒன்… ஒன் இஸ் லவ்

என்ற அழகிய வரிகளைப் பாடியபடி நடனமாடிய மீரா ஜாஸ்மின் முதலில் அவ்வளவாக கவனத்தை கவரவில்லை. பெண்களின் சராசரி உயரத்தை விடவே குறைவான உயரம்தான். ஆனால் சிறிது நேரம் சென்ற பிறகுதான் தெரிந்தது.  கடவுள் அந்த உயரக்குறைவை மீராவின்  அழகிய சிறுவட்ட முகத்தில், ஏராளமான முகபாவங்களை கலந்து அற்புதமாக ஈடு செய்திருந்தார்.

மீரா,  பிரேம் நசீர் போல் முகத்தையும், குரலையும் மாற்றிக்கொண்டு முகமெங்கும்… குறிப்பாக கண்களில் குறும்பு வழிய அட்டகாசமாக பேசியபோது, “இது சாதாப் பொண்ணு இல்லடா சுரேந்திரா…” என்று நிமிர்ந்து அமர்ந்தேன். அடுத்தக் காட்சியில் மீரா வாயில் எதையோ மென்றபடி, அலட்சியமாக பசங்களைப் பார்த்து ஃபிளையிங் கிஸ் கொடுத்தபடி கைனடிக் ஹோண்டாவில் கல்லூரியில் நுழைந்த காட்சியில் மீரா என் கண்களுக்குள் நுழைந்துவிட்டார். ஒரு காட்சியில் பிரின்ஸ்பால், “ஏன் இப்படி உடை உடுத்திக்கொண்டு வருகிறாய்?” என்று மீராவைக் கண்டிக்க…

மறுநாள் மீரா மலையாள கிறிஸ்துவ முதிய பெண்மணிகள் போல் வெள்ளை முண்டும் நீண்ட சட்டையும் அணிந்துகொண்டு, காதில் வளையத்துடன், வெத்தலைப் பாக்கு வாயை மென்றபடி, கைகளை அகல விரித்துக்கொண்டு சிறுமிகள் மேடை நாடகத்தில் நடிப்பது போல் நடந்து வந்த போது அசந்துவிட்டேன். அப்போது மீராவின் முகத்தில் பொங்கி வழிந்த உருவமில்லாத குறும்பு உணர்வை, கையால் தொட்டு எடுத்துவிடலாம் என்பது போல் அப்படி ஒரு குறும்புத்தனம்.

       இதற்காக பிரின்ஸ்பால் மீரா ஜாஸ்மினின் கார்டியனை அழைத்து வரச்சொல்வார். அதற்காக மீரா தன்னிடம் ஜொள்ளுவிடும் விஎம்ஸி ஹனீபாவை அழைத்துக்கொண்டு வருவார். அவரை மீராவின் தோழிகள், ‘டாடி…” என்று அழைக்க…. ஹனீபா கடுப்பாகும் காட்சியில், மீரா ஜாஸ்மின் கீழ் உதட்டின் இடது ஓரத்தை பற்களால் லேசாக கடித்தபடி, இடது கண்ணின் கடைசி ஓரத்தில் மிக அற்புதமாக கண்ணடித்து, “போங்க… போங்க…” என்று கைவீசி தனது தோழிகளை அனுப்பி வைக்கும் காட்சியை மட்டும் அப்படியே கண்ணில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கதாநாயகன் குஞ்சாகோ போபன் மீராவிடம், “காசுண்டோ சகாவே… ஒரு பில்லடைக்கான்…(ஒரு பில் கட்டுவதற்கு பணம் இருக்கிறதா தோழரே?)” என்று கேட்கும் காட்சியில் மீராஜாஸ்மின் செய்யும் புன்னகைக்கு பெயர்தான் காதல் புன்னகை.

சங்கீதம்
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

கஸ்தூரி மான் படத்தின் வெற்றியால் மலையாளத் திரைப்பட உலகில் மளமளவென்று உச்சிக்குச் சென்ற மீரா ஜாஸ்மின், தமிழில் லிங்குசாமியின் ‘ரன்’ படத்தில் நடித்தபோது  ஆவலுடன் படத்திற்குச் சென்றேன். ஆனால் அப்படத்தில் மீரா பெரும்பாலும் சோகமான மற்றும் பதட்டமான முகத்துடன் தோற்றமளிக்க… எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இருப்பினும் மீராவின் பலம் எது என்பதை நன்கு உணர்ந்திருந்த இயக்குனர் லிங்குசாமி, ‘காதல் பிசாசே… காதல் பிசாசே…” பாடலில் மீரா ஜாஸ்மினின் ட்ரேட் மார்க் குறும்புத்தனத்தை அழகாக வெளிக்கொண்டு வந்தார்.  மீரா ஜாஸ்மினின் துள்ளலான முகபாவங்களுக்காகவும், வித்யாசாகரின் அற்புதமான இசைக்காகவும், யுகபாரதியின் இளமையான காதல் வரிகளுக்காகவும் இன்றும் நான் அடிக்கடி பார்க்கும் பாடல்… “காதல் பிசாசே…”.

துள்ளலான இந்தப் பாடல்  வித்யாசாகருக்கும், யுகபாரதிக்கும் நடுவே ஒரு சிறு மோதல் நடந்த பிறகே உருவானது.

கவிஞர் யுகபாரதி சினிமாவிற்கு எழுதிய முதல் பாடல்… லிங்குசாமியின் ‘ஆனந்தம்’ படத்தில் இடம்பெற்ற ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல். பாட்டு மிகப்பெரிய வெற்றி. ஆனாலும் ஏனோ தெரியவில்லை. அதன் பிறகு எட்டு மாதங்கள் வரையிலும் வேறு பாடல் எழுதும் வாய்ப்பு யுகபாரதிக்கு கிடைக்கவில்லை. அடுத்து ‘ரன்’ படத்தை இயக்க ஆரம்பித்த லிங்குசாமி யுகபாரதியை அழைத்து, “இப்ப என்ன பாட்டெழுதுற?” என்று கேட்டார்.

“ஒண்ணுமில்ல சார்…”

“அந்தப் பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டு. ஏன் வாய்ப்பு வரல?”

“தெரியல சார்…”

“என்னோட அடுத்தப் படத்துக்கும் நீங்க பாட்டெழுதுறீங்க. வாங்க…” என்று யுகபாரதியை இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் யுகபாரதியை லிங்குசாமி அறிமுகப்படுத்தி வைக்க… யுகபாரதி தனது கவிதைப் புத்தகங்களை வித்யாசாகரிடம் கொடுத்தார். அதை வித்யாசாகர் இடது கையால் வாங்கியபோதே யுகபாரதி வெறுத்துவிட்டார். தொடர்ந்து வித்யாசாகர் அதை படித்துக் கூட பார்க்காமல் ஓரமாக தூக்கி வைக்க… யுகபாரதி மேலும் வெறுப்பாகிவிட்டார். வித்யாசாகர் கன்னடர். அதனால்தான் தமிழ் கவிஞனான தன்னை விரும்பவில்லை என்று நினைத்துக்கொண்டார்.  இருப்பினும் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தார்.

லிங்குசாமி, “என்னோட ஆனந்தம் படத்துக்கு இவர் எழுதுன பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாட்டு பெரிய ஹிட்…” என்று கூறியதற்கு வித்யாசாகர் அந்தப் பாட்டைக் கேட்டது போலவே காட்டிக்கொள்ளவில்லை. “அவ்ளோ பெரிய ஹிட் பாட்ட ஒருத்தர் கேக்காம இருக்கமுடியுமா?” என்ற ஆச்சர்யத்துடன் யுகபாரதி வித்யாசாகரைப் பார்த்தார்.

“என்ன பாட்டு சொன்னீங்க. மறுபடியும் சொல்லுங்க…” என்றார் வித்யாசாகர்.

லிங்குசாமி மீண்டும், “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்…” என்று சொல்ல… வித்யாசாகர், “இந்தப் பாட்டே தப்பா இருக்கே….” என்றார்.

அதிர்ந்துபோன லிங்குசாமி, “சார்… அது மிகப் பெரிய வெற்றி சார்…” என்றார்.

“வெற்றி அடையட்டும்ங்க. தப்பா இருந்தா வெற்றி அடையாதா என்ன? தப்பா இருக்கிறதுதான் இப்பல்லாம் ஜெயிக்குது…” என்றார்.

அதற்கு மேல் பொறுக்கமுடியாத யுகபாரதி, “என்ன தப்பு?” என்றார்.

“பல்லாங்குழின்னா குழி வட்டம்தானே… அதை எப்படி வட்டத்துக்கு பொருத்துறீங்க?அது தப்புதானே?” என்றார்.

பதிலுக்கு யுகபாரதி, “நிலா மாதிரி பொண்ணுன்னா பொண்ணு நிலா மாதிரியா இருக்கும்? தாமரை மாதிரி முகம்ன்னா முகம் தாமரை மாதிரியா இருக்கும்? எல்லாம் ஒப்பிடுறதுக்கு சொல்றதுதான்…” என்றார்.

அவ்வளவுதான். வித்யாசாகருக்கு கோபம் வந்துவிட்டது. “இப்பல்லாம் யாரும் ஒழுங்கா பாட்டு எழுதுறதில்ல…” அது… இது.. என்று சத்தமாக பேசினார். பிறகு லிங்குசாமி சமாதானப்படுத்த…. அமைதியான வித்யாசாகர், “காதல் கடிதம் எழுதுற மாதிரியான சுச்சுவேஷன். இந்தப் பையனப் பாத்தா காதல் கடிதம் கொண்டு போய் கொடுக்கிற பையன் மாதிரி கூடத் தெரியல. இவரு எப்படி காதல் கடிதத்துக்கு பாட்டெழுதுவாரு?” என்றார்.

லிங்குசாமி, “இல்ல சார்… இவர் என் முதல் படத்துக்கு எழுதுன முதல் பாட்டு ஹிட்டு. அதனால சென்டிமென்ட்டா…” என்று இழுக்க… “தொலைஞ்சு போ…” என்று வித்யாசாகர் யுகபாரதியிடம், “காதல் கடிதம் எழுதுற மாதிரி சீன். ஆனா ‘அன்புள்ள’ன்னு ஆரம்பிக்கக்கூடாது” என்றார்.

சங்கீதம்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

“அன்புள்ளன்னு எழுதாம எப்படிரா கடிதம் எழுதுறது…” என்று நினைத்த யுகபாரதி, “கண்மணி அன்போடு…. காதலன் நான் எழுதும் கடிதமே… அந்த மாதிரி இருக்கலாமா சார்?” என்றார்.

“அதான் வந்துடுச்சுல்ல? அதே மாதிரி நீங்க ஏன் எழுதணும்?”

“காதல் கடிதம் வரைந்தேன்…”

“அய்யய்யோ…. அந்த மாதிரில்லாம் எழுதக்கூடாதுங்க. உனக்கு பசிக்குதா? எனக்கு பசிக்கல…. தூக்கம் வரல… இந்த மாதிரில்லாம் எழுதக் கூடாது. ஃப்ரஷ்ஷா திங்க் பண்ணி எழுதுங்க…” என்றார்.

உடனே மிகவும் கோபமான யுகபாரதி லிங்குசாமியிடம், “சார்… இவருக்கு நான் பாடல் எழுதுறதுல துளியும் விருப்பம் இல்ல. ஒண்ணு… நீங்க வேற மியூசிக் டைரக்டரப் பாருங்க. இல்லன்னா வேற பாடலாசிரியரப் பாருங்க…” என்று சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பினார்.

லிங்குசாமி, “பாரதி… பாரதி” என்று அழைக்க…  அதற்கு யுகபாரதி, “என்னா சார்… சினிமா இவ்ளோ மோசமா இருக்கு. இந்த நாட்டுல நல்ல பாட்டு வராததுக்கு காரணம் இந்த மாதிரி இசையமைப்பாளருங்கதான்” என்று வித்யாசாகரை வைத்துக்கொண்டே தில்லாக கூறிவிட்டு வந்துவிட்டார்.

பின்னர் இரவு யுகபாரதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய லிங்குசாமி, “அவரு சொல்றதுல எதாவது அர்த்தம் இருக்கும். அதை மனசுல வச்சுக்காம எதாச்சும் புது மாதிரியா எழுத ட்ரை பண்ணுங்க…” என்று கூற… யுகபாரதி அதை சவாலாக எடுத்துக்கொண்டார்.

தீவிரமான யோசனைக்கு பின் சித்தர் பாட்டில் ‘பெண் என்னும் மாயப் பிசாசு’ என்று கூறியிருப்பதை மனதில் கொண்டு,

“காதல் பிசாசே…

காதல் பிசாசே…”

என்று ஆரம்பித்துவிட்டார். அதற்கு பிறகு ஒன்றும் ஓடவில்லை.

மறுநாள் காலை யுகபாரதியை தொலைபேசியில் அழைத்த ஒரு நண்பர், “என்னப்பா… எப்படியிருக்க?” என்று கேட்க… “ஏதோ இருக்கன்ப்பா” என்றார் யுகபாரதி. அதற்கு அவர், “என்னப்பா… ஒண்ணு நல்லாருக்கன்னு சொல்லு. இல்ல நல்லால்லன்னு சொல்லு. இது என்ன ரெண்டும் கெட்டானா?” என்றார். அப்போது யுகபாரதிக்கு சட்டென்று க்ளிக்கானது. “நலமா? நலம்தான்ன்னுல்லாம் பாட்டுல வரக்கூடாதுன்னு வித்யாசாகர் சொன்னாரே… ரெண்டுக்கும் நடுவுல ‘ஏதோ இருக்கேன்’னு ஒண்ணு இருக்கே…” என்று தோன்ற…. “ஏதோ செளக்கியம் பரவாயில்லை…” என்று அடுத்த வரி உருவானது. பின்னர் விறுவிறுவென்று அடுத்தடுத்த வரிகள்… என்று பாடல் வளர்ந்தது.

அன்று காலை யுகபாரதியின் பாடலைப் படித்துப் பார்த்த வித்யாசாகர் கையால் சைகை செய்து, “இங்க வா,…” என்று யுகபாரதியை அருகில் அழைத்தார்.

முந்தைய நாள் தான் கோபமாக பேசியதால் அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று யுகபாரதி நினைத்துக்கொண்டு “என்ன சார்?” என்று கோபமாக அவர் அருகில் சென்றார்.

யுகபாரதியின் தோளில் கைவைத்த வித்யாசாகர், “நேத்து நான் உன்ன கடிஞ்சு பேசினதாலதான், இன்னைக்கி இவ்ளோ அருமையா பாடல் எழுதியிருக்க. இனிமே நான் மியூசிக் பண்ற எல்லா படத்துலயும் உன் பாட்டு இருக்கும்.” என்றார் புன்னகையுடன்.

கலையின் மிகப்பெரிய வெற்றி இதுதான். ஒரு உண்மையான… அசலான கலை,  மனிதர்களின் கோபதாபங்களை ஜெயித்துவிடும்.

காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை

தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை

காதல் பிசாசே லவ்
லவ் லவ் லே காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே காதல்
பிசாசே லவ் லவ் லவ் லே

கொஞ்சம் உளறல்
கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ

கொஞ்சம் சிணுங்கல்
கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ

அய்யோ அய்யய்யோ
என் மீசைக்கும் பூவாசம் நீ
தந்து போனாயடி

பையா ஏ பையா
என் சுவாசத்தில் ஆண்
வாசம் நீயென்று ஆனாயடா

அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை

காதல் பிசாசே காதல் பிசாசே

கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ

கொஞ்சம் துடித்தாய்
கொஞ்சம் நடித்தாய்
ரெட்டை பிறவி நீ நீ நீ

அம்மா அம்மம்மா
என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்

அப்பா அப்பப்பா
நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்

அஞ்சு வயதுப் பிள்ளைபோலே
அச்சச்சோ கூச்சத்தாலே கொஞ்சிக்
கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை

காதல் பிசாசே காதல் பிசாசே..

சங்கீதம்
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com