
நடிகர் ரஜிகாந்த் தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கவுள்ள நிலையில் விரைவில் இத்திரைப்படம் திரைக்காணவுள்ளது.
லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 170வது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் #தலைவர் 170 அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் அனிரூத் இசையில் ரஜினி நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. லைகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" திரு. ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற "சூப்பர் ஸ்டார்" திரு.ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "#தலைவர் 170" திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.