'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

மணிரத்னம் பயந்தது போல் அப்பாடல், படத்தின் வெற்றியை பாதித்ததாகத்தான் தோன்றுகிறது. அப்பாடலைக் கேட்டு, அந்த படம், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஏக் துஜே கேலியே’ போல காதல் படமாக இருக்கும் என நினைத்தேன்.
Maniratnam
ManiratnamTimepass

ராசாத்தி என் உசுரு என்னதில்ல: மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்

       நான் ஒரு அரசு ஊழியரின் மகனாக நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். படித்து முடித்தவுடனேயே வேலையிலும் சேர்ந்துவிட்டதால், என் 26 வயது வரையிலான வாழ்க்கையில் பசி,  பட்டினி, வறுமை, துயரம், அவமானம்… போன்ற விஷயங்களை பெரிதாக சந்தித்ததில்லை. ஆனால் அனைத்திற்கும் சேர்த்து வைத்து, ஒரு காதலின் பொருட்டு எனது வாழ்க்கையின் மகத்தான துயரங்களையும், அவமானங்களையும், கண்ணீரையும் சந்தித்தேன்.

       1990களில் சென்னையின் வீதிகளில் பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிளில்  திரிந்துகொண்டிருந்த நான், கல்லூரிக்கே காரில் செல்லும் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிக்க நேர்ந்தது. சைக்கிளில் வந்து கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கும் என்னைச் சந்திக்க அவள் காரில் வருவாள்.

பேசிச் சிரித்து கிளம்பும்போது அவள் டிரைவர் சீட்டில் ஏறும்போது, நான் காரருகில் எனது சைக்கிளோடு நிற்பேன். அவள் கார்க் கதவை அடித்துச் சாத்தும்போதெல்லாம் எனக்கு திக்கென்று இருக்கும். ஏனெனில் எனது சைக்கிளின் அருகிலிருக்கும் அந்தக் காரின் கதவொலி, எங்கள் அந்தஸ்து வித்தியாசத்தை மறைமுகமாகச் சொல்வது போலிருக்கும். எனது சம்பளம் அவளுடைய கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராது. எனவே அவள் அந்தக் கார்க் கதவை அடித்துச் சாத்தும்போதெல்லாம், அது எங்கள் காதலை அடித்து துரத்துவது போலவே இருக்கும். இதை ஒரு முறை நான் அவளிடம் கூறினேன்.

மறுநாள் நாங்கள் புறப்படும்போது அவள் கார்க்கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, “நீ போ…” என்றாள். அவள் எதற்குச் சொல்கிறாள் என்று புரிந்துகொண்டு, “நீ கிளம்பு…” என்றேன்.

“நீ சொன்ன பிறகு தனியா போறப்பக் கூட கார்க் கதவ அடித்துச் சாத்தக் கஷ்டமா இருக்குடா.  நீ போ…” என்றாள்.

நான் புன்னகையுடன், “பரவால்ல… நீ போ…” என்றேன்.

“அய்யோ… என்னால முடியாது. நீ போடா… ப்ளீஸ்…” என்று கெஞ்சுவாள். நான் விடாமல் நின்று வம்பிழுத்துக்கொண்டிருப்பேன். வேறு வழியின்றி கார்க் கதவை மிக மெதுவாக அடித்துச் சாத்துவாள். அப்போதும் சத்தம் கேட்கும். மீண்டும் மீண்டும் அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

       இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கார்க்கதவு சத்தம், எங்களை பலமாக தாக்கிப் பிரித்து தூரத்தில் தூக்கி வீசியது. எங்கள் காதல் விவகாரம் அவர்கள் வீட்டில் தெரிந்தவுடன், எங்கள் காதலை கடுமையாக எதிர்த்தார்கள். எங்களைப் பிரித்தார்கள். பல மாத காலம் அவளைச் சந்திக்கவே முடியவில்லை. அப்போது மொபைல் இல்லாத காலகட்டம். நான் அவளைத் தொடர்புகொள்ளும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது நான் மந்தைவெளியில் தங்கியிருந்த வீட்டு வாசலில் இருந்த டிரைக்ளீனர்ஸின் லேண்ட்லைன் நம்பரை எப்படியோ பெற்று அவள் என்னை அழைத்தாள்(இதற்குப் பிறகு நடந்தவற்றையெல்லாம் நான் ஒரு சிறுகதையில் விரிவாக எழுதியுள்ளமையால் இப்போது சுருக்கமாக கூறுகிறேன்).

Maniratnam
'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 6

“நல்லாருக்கியா சுரேந்தர்?” என்றவள் அழுதுவிட்டாள்.

“ம்... இருக்கேன்.  நீ எப்படி இருக்க?” என்றேன் எச்சிலை தொண்டையில் விழுங்கியபடி

“தினம் செத்துகிட்டிருக்கேன்” என்றவள், “எங்க வீட்டுல பயங்கர பிரச்னை பண்றாங்க. ஆனா என் வாழ்க்கைல கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, அது உன் கூடதான். நீ இல்லன்னா நான் செத்துடுவேன்டா. ஆனா கட்டாயம் நம்ப வீட்டு சம்மதத்தோடதான் நம்ப கல்யாணம் நடக்கனும்.”

“உங்க வீட்லதான் பிரச்சனை பண்ணுவாங்க. நீதான் உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கணும்.”

“எனக்கு பேச பயமா இருக்குடா. எங்க வீட்டப் பொறுத்த வரைக்கும், நான் உன்ன சுத்தமா மறந்துட்டதா நினைச்சுட்டிருக்காங்க.  இப்ப மறுபடியும் உன் பேச்ச எடுத்தன்னா பொங்கி எழுந்திடுவாங்க.  அத என்னால தாக்குபிடிக்கமுடியாது.”

“இப்படி சொன்னா எப்படி?”

“ப்ளீஸ்டா…  நீயே ஏதாச்சும் பண்ணுடா.  என்ன விட்டுடாதடா.  நீ இல்லன்னா சத்தியமா நான் செத்தே போயிடுவேண்டா.” என்று மீண்டும் அழுதாள்.  நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.  அவள் அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க... நான் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தேன்.

சில வினாடிகள் யோசித்த நான், “சரி… நாளைக்கு ஞாயித்துக்கிழமை. சாயங்காலம் உங்க வீட்டுல வந்து பேசுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ உங்க வீட்டுல பேசி வை…”

“சரி… நான் பேசிடுறேன். ஆனா நீ கண்டிப்பா வரணும்…”

றுநாள் மாலை. அண்ணாநகரிலிருந்த அந்த பெரிய பங்களாவினுள் நுழைந்து, அந்த பெரிய காருக்கு அருகே எனது பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிளை நிறுத்தினேன். அவள் கார்க் கதவை அடித்துச் சாத்த சங்கடப்படும் அதே கார்.

நான் வீட்டிற்குள் நுழைய…  ஹாலில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய அப்பா, என்னைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.  டி.வி. சத்தத்தை தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை.  நான் அவரைப் பார்க்க… அவர் எந்த சலனமுமின்றி டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். ஏறத்தாழ கால் மணி நேரம் சென்றிருக்கும். வேறு யாரும் கண்ணில் படவில்லை. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அப்போது திடீரென்று அங்கு அவள் வந்தாள். மஞ்சளில் வெள்ளை நிற வட்டப் புள்ளிகளிட்ட சுடிதார் அணிந்திருந்தாள்.

“கொஞ்சம் உள்ள வா.  நான் உன்கிட்ட பேசணும்.”  என்றாள் என்னிடம்.

“நான் பேசிக்கிறேன்.  நீ போ.” என்றார் அவளுடைய அப்பா. 

“ரெண்டு நிமிஷம்தான்.  நானே பேசி அனுப்பிடுறேன்.” என்று அவள் கூறியவுடன் என் மனத்தில் ஏதோ இடறியது.

“நீ உள்ள வா...” என்று அவள் முன்னே செல்ல… நான் அவள் அறையினுள் நுழைந்தேன்.

நான் உள்ளே நுழைந்தவுடன், அங்கிருந்த அவளுடைய அம்மா எழுந்து வெளியே சென்றார். அவள், “உட்காரு” என்று கட்டிலருகிலிருந்த நாற்காலியைக் காட்ட… நான் பேசாமல் அமர்ந்தேன். கட்டிலில் அமர்ந்தவள், “உனக்கு ஃபோன் பண்ணினதுக்கு ஸாரி...” என்றாள்

“ஏன்?” என்றேன் ஒருவாறு விஷயத்தை யூகித்துக்கொண்டு.

“வேண்டாம்... இது சரிபட்டு வராது. எங்க வீட்டுல நேத்து நான் பேசினேன். நம்ப பிரியறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்றபோது உள்ளுக்குள் சுளீரென்றது. “கடவுளே…” என்று மனசிற்குள் பொங்கி அடங்கினேன்.

“என்ன  திடீர்னு...” என்றேன். 

ஏனோ தெரியவில்லை.  எனக்கு கோபம் கூட வரவில்லை. ஒரு தாங்க முடியாத வேதனை மட்டும் மனசு முழுக்க பரவிக்கொண்டிருந்தது. அழுகை வருவது போலிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். 

“எங்கப்பா என்கிட்ட பேசினாரு.  நானும் யோசிச்சுப் பார்த்தேன். இது சரிபட்டு வராது.”

“இதெல்லாம் நீ ஃபோன் பண்ணி அழறப்ப தெரியலையா?”

“அதுக்குதான் ஸாரி கேக்குறேன்.”

“ம்ஹ்ம்... ஸாரி...” என்று வேதனையுடன் கண்களை மூடிய நான், “ஏன்ம்மா?” என்றேன்.

“சரிப்பட்டு வராது.  அவ்வளவுதான். எல்லாம் முடிஞ்சுபோச்சு…”  என்றவள் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.  சுவர்பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“ஏன்? உங்கப்பா ஒத்துக்கலையா? என்னை எதாச்சும் பண்ணிடுவேன்று மிரட்டினாரா?”

“ஏதோ ஒரு காரணம். என் விதி அப்படின்னா என்ன பண்ணமுடியும்?”

“அப்புறம் ஏன் என்கிட்டே அவ்ளோ அழுகை...கதறல்... கண்ணீர்…” என்றேன்.

“ஸாரி...” என்று மீண்டும் அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த அவளுடைய அப்பா,  “அதான் சொல்லிட்டாள்ல... நீ போலாம்.” என்றார்.

“இல்ல சார்…”

Silverscreen Inc.

“ஏம்ப்பா... ஏதோ வயசுக் கோளாறுல பண்ணிட்டா. இப்பதான் தெளிவாச் சொல்லிட்டால்ல? என்கிட்ட பேச இனிமே ஒண்ணுமில்ல. நீ போலாம்.”

“இல்ல சார்... ஒரே ஒரு விஷயம்...”

“அட பேச ஒண்ணுமில்லங்கறேன். நீ போப்பா...”

“சார்... ஒரே நிமிஷம்.”

“இப்ப நீ போறியா? இல்லையா? வீட்டை விட்டு வெளியப் போடான்னு பச்சையா சொல்லணுமா?” என்று அவர் சத்தமாக கூற… நான் மனத்திற்குள் நார் நாராக கிழிக்கப்பட்டேன். நான் அவளைப் பார்த்தேன். அவள் கையெடுத்துக் கும்பிட்டு, “ப்ளீஸ்… போயிடுரா…” என்றாள் கண்கள் கலங்க.

நான் சில வினாடிகள் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி அவளுடைய அம்மாவைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. அவரும் லேசாக கண்கலங்க என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் வெளியே வந்தேன்.  நடக்க முடியாமல் கால்கள் துவண்டன. எனது பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்தேன்.  சத்தமின்றி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  தோள்பட்டை சட்டையில் துடைத்துக்கொண்டேன்.  “பெரிய இடத்துல கல்யாணம் பேசப்போற... நல்ல சட்டைப் போட்டுகிட்டு போடா…” என்று ரூம்மேட் நாராயணன் அளித்த அவனது ஆலன் ஷோலி சட்டை,  எனது கண்ணீர் பட்டு அழுக்கானது.

மனத்திற்குள் அனாதை போல் ஒரு உணர்வு. கேட்டை விட்டு வெளியே வந்த நான், இருபுறமும் மரங்கள் சலசலக்கும் அந்த அகலமான சாலையில் கண்ணீர் வழிய நடக்க ஆரம்பித்தேன். எனக்காக குடம், குடமாக கண்ணீர் வடித்தவள், ஒரே நாளில் எப்படி மாறினாள்? அதற்கான விடையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Maniratnam
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

காதலில் தோற்ற காலத்தில், காதல் தோல்விப் பாடல்களை கண்கலங்கக் கேட்பது ஒரு துயரகரமான பொழுதுபோக்கு. அப்போது நான் அடிக்கடி கேட்ட பாடல் மணிரத்னத்தின் ‘திருடா திருடா” படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் அற்புதமான இசையில் இடம்பெற்ற, ‘ராசாத்தி என் உசுரு…” பாடல். கவிஞர் வைரமுத்து என்னைப் போன்ற காயப்பட்ட மனிதர்களுக்காகவென்றே எழுதியது போல், செதுக்கி செதுக்கி எழுதிய பாடல் அது. வைரமுத்துவின் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று அது. அந்தப் பாடலின் அதி அற்புதமான நவீன நாட்டுப்புற இசைக்காகவும், வைரமுத்துவின் அபாரமான வரிகளுக்காகவும், சாகுல் ஹமீதின் குரலிலிருந்த சோகத்திற்காகவும் மீண்டும் மீண்டும் அப்பாடலை நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

இப்பாடல் குறித்து இயக்குனர் மணிரத்னம் ஒரு நேர்காணலில், “நான் ‘திருடா திருடா’ படத்தை ஒரு பெண்ணால் துரத்தப்படும் இரண்டு ஆண்களின் கதையாக வேடிக்கையாக சொல்லத்தான் நினைத்தேன். அவ்வாறே படமும் வந்தது. ஆனால் ‘ராசாத்தி’ பாடலுக்கு நாங்கள் இசையமைத்தபோது அது ஒரு மிக மிக அற்புதமான, உணர்வுபூர்வமான பாடலாக வந்துவிட்டது. அந்தப் பாடலுக்கான சூழல் அப்படத்தில் இருந்தது. ஆனால் பாடல் மிகவும் ஆழமான உணர்வைப் தூண்டும் பாடலாக வந்துவிட்டது. அதனால் படத்தின் காதல் பகுதி மிகவும் கனமாகிவிட்டது. ஆனால் அந்தளவு காதல் அந்தப் படத்தில் இல்லை. இந்த வேடிக்கையான சேஸிங் படத்துக்கு அந்தப் பாடல் தேவையில்லை என்று நினைத்தேன். எனவே நான், “இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் வேண்டாம். அடுத்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றேன். ஆனால் வைரமுத்துவும், ரஹ்மானும், “பாடல் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. கட்டாயம் இந்தப் படத்தில் இதை வைத்துக்கொள்ளலாம். அடுத்தப் படத்தில் வேறு பாடல் வைத்துக்கொள்ளலாம்…” என்றனர்.

ஏனெனில் மனிதர்களின் ஆன்மாவைத் தொடும் இந்தப் பாடலும் அந்தப் படத்தில் இருந்தால், அந்தப் படத்தின் ஒட்டுமொத்த ஆல்பமும் ஒரு பரிபூர்ணமான, அனைத்து வகைப் பாடல்களும் அடங்கிய ஆல்பமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் நான் அப்பாடல் படத்திற்குள் எவ்வாறு பொருந்தி வரும் என்றுதான் பார்த்தேன். பாடல் படத்தோடு ஒட்டாது துருத்திக்கொண்டிருந்தால் என்ன செய்வது என்று பயந்தேன். அந்தப் பாடலைப் படத்தில் கொண்டு வரமேண்டுமென்றால், அந்த உணர்வையும் படத்தில் கொண்டு வரவேண்டும். அது ஒரு நல்ல பாடலாக இருந்தால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த படத்தோடும் அது இயைந்து வரவேண்டும் என்று நினைத்தேன். எனவே அதற்காக சில சிறு மாற்றங்களை செய்தேன்." என்று கூறியிருக்கிறார். இருப்பினும் அந்தப் பாடல் படத்திலும், ஆல்பத்திலும் வெளிவந்து லட்சக்கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

ஆனால் மணிரத்னம் பயந்தது போல் ஒரு கோணத்தில் அப்பாடல், ‘திருடா… திருடா..” படத்தின் வெற்றியை பாதித்ததாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில் நானெல்லாம் அப்பாடலைக் கேட்டுவிட்டு, ‘திருடா திருடா…” படம், மணிரத்னத்தின், ’இதயத்தை திருடாதே’, மற்றும் பிற இயக்குனர்களின் ‘தேவதாஸ்’, “வசந்த மாளிகை’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஏக் துஜே கேலியே’. ‘முதல் மரியாதை’ போன்ற காதல் படமாக இருக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது நிஜமாகவே திருடர்களைப் பற்றிய படம் என்ற கேள்விப்பட்டவுடன் மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. அதற்காகவே அப்படத்தை நான் பார்க்கவில்லை. இது போன்று பலரும் நினைத்திருக்கலாம். எனவே இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அப்படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் அப்போது என்னைப் போன்ற காதலில் தோற்ற இளைஞர்களுக்கு இப்பாடல் மிகப்பெரிய ஆறுதல் கீதமாக இருந்தது. அப்போது என் மனதில் ஆறாதிருந்த காயத்தை ‘ராசாத்தி என் உசுரு…’ பாடல் மீண்டும் மீண்டும் மயிலிறகால் வருடிக்கொண்டேயிருந்தது. இப்போதும் இந்த 50 ப்ளஸ் வயதில் இந்தப் பாடலைக் கேட்கும்போது, ஒரு கசப்பான புன்னகையுடன் அந்தக் காயத்தின் தழும்பை வருடிப் பார்த்துக்கொள்கிறேன்.

      
ராசாத்தி… என் உசுரு என்னதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடிபுள்ள

ராசாத்தி என் உசுரு என்னதில்ல

கார வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையில
மஞ்சள அரைக்கும் முன்ன
மனச அரச்சவளே

கரிசாக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைகயிலே
துணிய நனைய விட்டு
மனச புழிஞ்சவளே

அந்த களத்து மேட்டில்
என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
போறவளே
போரவ போரவதான்
போத்திக்கிட்டு போனவதான்

அந்த கல்யாண சேலையில
கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவளே
 போறவ போறவ தான்
பொஞ்சாதியா போனவதான்

நான் தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி
அழுதபடி போற புள்ள

ஆஆஆஆஅஆஅ
{கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்‌துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)

ராசாத்தி என் உசுரு என்னதில்ல

தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே

மருதையில வாங்கித் தந்த
வளவி ஓடையலையே
மல்லு வேட்டி மத்தியில
மஞ்சக் கர மாறலையே

அந்தக் கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும்
பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ
பௌர்ணமியும் வாரதெப்போ

அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும்
கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரதண்டும் பூப்பதெப்போ

கருவேலங் காட்டுக்குள்ள
கரிச்சான்குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா
தொணையத்தான் காணோமின்னு

ஓஓஒ ஓஒஓஒஊஓஒ
{கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்‌துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)

ராசாத்தி என் உசுரு என்னதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடிபுள்ள

ராசாத்தி என் உசுரு என்னதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள

Maniratnam
'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 6

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com