நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

“வயசுப்பையன்கிட்ட பேரு கேக்கிறது ரொம்ப தப்பு” என்று கூறிவிட்டு ஓடினான். அவள் தோழியிடம், “இந்தப் பய என் மனசுக்குள்ள பயங்கர கலர் கலரா கலாட்டா பண்றான்” என்று...
நினைவே ஒரு சங்கீதம்
நினைவே ஒரு சங்கீதம்Episode

சென்னை. அந்த பிரமாண்டமான மாலின் வாட்ச் ஷோரூமிலிருந்த கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருந்தான் அவன். திடீரென்று யாரோ தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்து
திரும்பினான். எதிரிலிருக்கும் மொபைல் ஷாப்பைப் பார்த்தான். சட்டென்று அந்த விற்பனைப் பெண் திரும்பி செல்ஃபிலிருந்த ஆப்பிள் ஃபோனை எடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்தபோதுதான் கவனித்தான். அவள் அழகாக இருந்தாள். மிக மிக அழகாக இருந்தாள். உற்சாகமானான். மீண்டும் திரும்பி அவனைப் பார்த்தவள், அவன் தன்னைக் கவனிப்பதை பார்த்துவிட்டு சங்கடத்துடன் நெற்றியை கட்டைவிரல் நகத்தால் கீறியபடி தலையைக் குனிந்துகொண்டாள்.

மணி காலை பத்தரைதான் என்பதால் மாலில் மக்கள் நடமாட்டமே இல்லை. அவன் சேல்ஸ் கவுண்டரிலிருந்தவனைப் பார்த்து, “மொபைல் ஷாப்ல யராச்சும் புதுப் பொண்ணு வேலைக்கு சேந்துருக்கா?” என்றான்.
“ஆமாம். வந்ததுலருந்து உங்களையே பாத்துகிட்டிருக்கு….”
“வந்ததுலருந்தே பாக்குதா? ஒரு நிமிஷம் நீ கேஷப் பாத்துக்கோ…” என்று வேகமாக எழுந்தவன் மொபைல் ஷாப்பை நோக்கி நடந்தான். அவன் வருவதைப் பார்த்துவிட்டு அவள் செல்ஃப் பக்கம் திரும்பி ஏற்கனவே அடுக்கியிருந்த மொபைல்களை மீண்டும் அடுக்க ஆரம்பித்தாள்.

அவன் அவளை நெருங்கி, “தப்புங்க…. ரொம்ப தப்பு” என்றான்.
அவள் பதட்டத்துடன் திரும்பி, “என்ன தப்பு?” என்றாள்.
“இப்படி காலங்காத்தால பத்தரை மணிக்கு ஒரு பையன குறுகுறுன்னு பாக்குறது…”
“நான் யாரையும் பாக்கல… உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் வேகமாக.
“ஒரு புது வார்த்தை வேணும்…”
“வாட்?” என்று அவள் நெற்றியைச் சுருக்கினாள்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'நெஞ்சம் மறப்பதில்லை பிரிந்த காதலின் தீராவலி'

“நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தமிழ்ல ஒரு புது வார்த்தை உருவாக்கணும்….”
“என்னது?” என்றாள் அவள் ஒன்றும் புரியாமல்.
“இப்ப பாத்தீங்கன்னா… நடிகை பூஜா ஹெக்டே அழகா இருக்காங்க. அழகிங்குறோம். ஆனா பிரியங்கா மோகன், பூஜா ஹெக்டேவ விட பயங்கர அழகு. ஆனா அவங்க அழகச் சொல்லவும் அதே ‘அழகி’ங்கிற வார்த்தையதான் யூஸ் பண்ணவேண்டியிருக்கு…”
“இப்ப எதுக்கு இதையெல்லாம் நீங்க என்கிட்ட சொல்றீங்க?”
“இல்ல… இந்த மேக்கப் போட்ட பூஜா ஹெக்டே, பிரியங்கா மோகன விடல்லாம், மேக்கப் போடாமலே நீங்க பயங்கர அழகா இருக்கீங்க. உங்களையும் அதே மாதிரி சும்மா ‘அழகி’ன்னு மட்டும் சொல்றது நியாயமே இல்லைங்க. அதனால, உங்கள மாதிரி பயங்கரமான அழகிங்கள சொல்றதுக்கு ஒரு புது வார்த்தை உருவாக்கவேண்டியிருக்கு. வர்றீங்களா? அப்படி ஓரமாக உக்காந்து அந்த வார்த்தைய கண்டுபிடிச்சுட்டு வந்துடுவோம்…” என்றவுடன் லேசாக புன்னகைத்த அவள், ”நீங்க மணிரத்னம், கௌதம்மேனன் படம்ல்லாம் நிறையப் பாப்பீங்களா?” என்றாள்.
“ஏன்?”
“முதல் சீன்லயே ஹீரோயின்கிட்ட இந்த மாதிரி ரொமான்ட்டிக்கா பேசி….” என்றவளின் பேச்சை இடைமறித்த அவன், “அப்ப நான் ரொமான்ட்டிக்கா பேசுறனா?” என்றவுடன் அவள் நாக்கைச் சட்டென்று கடித்தபடி, தலையில் லேசாக அடித்துக்கொண்டாள்.

“உங்கள்ட்ட இதுக்கு முன்னாடி யாராச்சும் சொல்லியிருக்காங்களா?” என்றான் அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி.
“என்ன சொல்லியிருக்காங்க?”
“இந்த உலகத்துலயே நீங்கதான் ரொம்ப அழகின்னு” என்றவுடன் சட்டென்று முகம் சிவந்த அவள் கடை வாசலைப் பார்த்துவிட்டு, “அய்யோ… ஓனர் வர்றாரு…” என்று வேகமாக நகர்ந்தாள்.

மறுநாள் காலை மணி 9.45. மால் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு எஸ்கலேட்டரில் ஏறும்போதுதான் கவனித்தான். முன்னாள் அவளும், அவளின் கடைத் தோழியும். எஸ்கலேட்டர் படிக்கட்டுகளில் வேக, வேகமாக ஏறி, “ஹாய்….” என்றான். ஒரு வினாடி முகம் மலர்ந்தவள், சட்டென்று மீண்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். அவன் அவள் தோழியைப் பார்த்து, “நேத்து உங்க ஃப்ரண்டு சொல்லியிருப்பாங்களே… நான் ரொம்ப ஸ்வீட்டா, செம க்யூட்டா பேசினன்னு?” என்றான்.

அவள் புன்னகையுடன், “ஆமாம்….” என்றபோது அவர்கள் எஸ்கலேட்டரிலிருந்து இறங்கியிருந்தனர். தொடர்ந்து அவன் தோழியிடம், “கொஞ்சம் ஒதுங்கிக்கிறீங்களா? பாப்பாகிட்ட 95 வேர்ட்ஸ் மட்டும் பேசிட்டுப் போயிடுறேன். நான் பேசுற வார்த்தைங்கள கவுண்ட் பண்ணிக்குங்க. 95 ஆனவுடனே சொல்லுங்க. ஸ்டார்ட் பண்ணுங்க. ஒன்…” என்றவன் திரும்பி அழகியைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
“நேத்து ராத்திரி மேல சுத்துற ஃபேன பாத்துகிட்டே சிரிச்சீங்களா?"
“இல்ல” என்றாள் புன்னகையை அடக்கியபடி.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

“பெட்ல குப்புற படுத்துகிட்டு, மேலயும், கீழயும் கால ஆட்டிகிட்டு, கட்டைவிரலை கன்னாபின்னான்னு கடிச்சுகிட்டு, “சீ”ன்னு சுவரப் பாத்துச் சொன்னீங்களா?”
“இல்ல….” என்றவள் சிரிப்பை அடக்கமுடியாமல் திணறினாள்.
“சுகர் பேஷண்ட் வீட்டுக்குத் தெரியாம ஸ்வீட்ட சாப்பிடுறப்ப வாய வச்சுக்குற மாதிரி இருக்காதீங்க. நல்லாவே சிரிக்கலாம்”

“ஹேய்… இப்ப உனக்கு என்ன வேணும்?”
“நேரா என்னைப் பாத்து, பர்ஸ் ஜிப்பை சரக்குன்னு திறக்கிற மாதிரி, உதட்டத் திறந்து முழுசா சிரிக்கணும்”
அவள், “ஈ…” என்று இழுத்துக் காண்பித்து சிரித்துவிட்டு, “போதுமா?” என்றாள்.
“போதும். வாய மூடிக்குங்க. குழந்தைங்க பயந்துடும்”
“அய்யோ…. உனக்கு என்ன வேணும்? நீ என்னை லவ் பண்றியா?”
“தெரில. அழகா இருக்க. இப்போதைக்கு சைட் அடிக்குறேன். அது காதலா மாறுமான்னு….” என்றவன் தோழியைப் பார்த்து, “எத்தனை வேர்ட் ஆச்சு?” என்றான்.
“59”
“குட்….” என்றவன் மீண்டும் அவளைப் பார்த்து, “இனிமே நீங்க தினம் கனவுல வந்து, “என் மடியில் துயில் கொள்ளடான்னு” கிக்காப் பாடணும். உங்களப் பாக்குறப்பல்லாம் என் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி படபடன்னு பறக்கணும்.

அப்புறம் நீங்க சிரிக்கிறப்பல்லாம், ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம முழுசா ஒரே வாய்ல முழுங்கின மாதிரி உடம்புல்லாம் சில்லுன்னு ஆவணும். அப்படில்லாம் நடந்துச்சுன்னா அதுதான்… “ என்றவன், “ஸாரி… 95 வேர்டாயிடுச்சு” என்று நிறுத்தினான்.
தோழியைப் பார்த்து, “கவுண்ட்டிங் மிஸ் பண்ணீட்டிங்க. அடுத்த தடவை சரியா எண்ணனும்” என்றவன் வேகமாக நடந்தான். அவள் சத்தமாக, “ஹேய்…. உன் பேரு என்ன?” என்றாள்.

“வயசுப்பையன்கிட்ட பேரு கேக்கிறது ரொம்ப தப்பு” என்று கூறிவிட்டு வேகமாக முன்னால் ஓடினான்.
அவள் தோழியிடம், “இந்தப் பய என் மனசுக்குள்ள பயங்கர கலர் கலரா கலாட்டா பண்றான்” என்று கூறிவிட்டு, முன்னால் சென்றவனைப் பார்த்து, “ஏய்… தம்பி சின்னப்பையா…” என்ற கத்த… அவன் நின்றான்.
அவனை நெருங்கியவள், “இப்படித்தான் எப்பவும் பேசுவியா?” என்றாள் சிரித்தபடி.

“உலகின் மிக அழகான ஒரே ஒரு பொண்ணுகிட்ட மட்டும்” என்றவுடன் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவன், “உன் மனசுக்குள்ளயும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சிடுச்சா?” என்றான்.
“தெரியல. ஆனா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி வந்து உக்காந்துடுச்சு”
“அப்ப கூடிய சீக்கிரம் பறக்கும். பறக்க ஆரம்பிச்சவுடனே சொல்லு. வந்து கப்புன்னு பிடிச்சுடுறேன்” என்றவனுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடந்தாள்.
அன்றிரவு, அவனை நினைத்தபடியே புன்னகையுடன் அவள் கட்டிலின் இடப்பக்கம் புரண்ட கணத்தில், அவன் வலப்பக்கம் புரண்டுகொண்டிருந்தான்.

நினைவே ஒரு சங்கீதம்
'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதிற்குள் காதல் உருவான பிறகு, அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிப்பது வரையிலான காலகட்டம்தான், காதலின் மிகவும் அற்புதமான காலகட்டம். ஒரு வசந்தகாலத்தின் மலருதிரும் தருணம் போல், ஒரு மழைக்காலத்தின் முதல் மழைச்சத்தம் போல், ஒரு பனிக்காலத்தின் முதல் விடியற்காலை குளிர் போல், அந்த காலகட்டம்தான் எவ்வளவு உற்சாகமானது? காதலின் இந்த காலகட்டத்தில் ஒருவர் மனதில் ஏற்படும் உற்சாகத்தையும், தவிப்பையும் உலகின் அத்தனை சிறந்த எழுத்தாளர்களும் ஒன்று கூடி எழுதினாலும், அதன் முழுமையான பரிமாணத்தில் சொல்லமுடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இசையால் முடியும். இசைஞானி இளையராஜாவால் மிக மிக அற்புதமாக சொல்லமுடியும். 1984-ல் வெளிவந்த, ‘தம்பிக்கு எந்த ஊரு?’ படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று….” பாடலைக் கேட்கும் போதெல்லாம், மீண்டும் 20 வயதுகளுக்குச் சென்று, யாராவது ஒரு பெண்ணை எக்கச்சக்கமாக காதலிக்கத் தோன்றுகிறது. அற்புதமான இந்த பாடல் உருவான விதம், அந்தப் பாடலைப் போலவே அற்புதமாக இருக்கிறது.

அப்போது இளையராஜாவிற்கு ஹெர்னியா(குடல் சரிவு) அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கவேண்டும். அதற்கு பிறகுதான் வழக்கமான பணிகளில் ஈடுபடவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஆனால் ஒரு வாரத்தில் உடல்நிலை சரியாகவில்லை. மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. மீண்டும் நார்மல் நிலைக்கு வர ஒரு மாதம் ஆகும் என்று கூறிவிட்டார்கள். அதனால் இளையராஜா பணிபுரிந்துகொண்டிருந்த பல படங்களின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விபரம் அறிந்த தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

அப்போது பஞ்சு அருணாசலம் அவர்கள், ரஜினி நடிக்கும் ‘தம்பிக்கு எந்த ஊரு?’ திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துகொண்டிருந்தது. ஊட்டியில் நினைத்ததை விட விரைவாகவே காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதால், அங்கு இரண்டு பாடல்களை எடுத்துவிடலாம் என்று அப்படத்தின் இயக்குனர் ராஜசேகர் முடிவெடுத்து, பஞ்சு அருணாசலத்துக்கு தகவல் அனுப்பினார்.

பஞ்சு அருணாசலத்திற்கு இளையராஜா உடல்நலமின்றி இருப்பது தெரியும். இருப்பினும் வேறு வழியின்றி தயங்கி, தயங்கி இளையராஜாவின் வீட்டுக்குச் சென்றார். படத்தின் கதையையும், பாடல்கள் இடம்பெறும் சூழ்நிலையையும் சொல்லிவிட்டு, “இரண்டு பாடல்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. இப்போது என்ன செய்வது? உங்களைத் தொந்தரவு செய்யவும் கஷ்டமாக இருக்கிறது.” என்றார்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

இளையராஜாவுக்கோ பேசவே சக்தியில்லை. டாக்டரும் “பேசக்கூடாது... தையல் பிரிக்கும் வரை அடிவயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.” என்று கூறியிருந்தார். பாடினால் மூச்சு தம் கட்டவேண்டியிருக்கும். என்ன செய்வதென்று இளையராஜா யோசித்தாலும், பஞ்சு அருணாசலம் பாடல் இடம்பெறும் சூழ்நிலையை கூறியவுடனேயே, அவருக்குள் இசை ஊற்று சுரக்க ஆரம்பித்துவிட்டது. சில வினாடிகள் யோசித்த இளையராஜா, சட்டென்று ஒரு முடிவெடுத்தார்.

படுத்தவாறே முழுப் பாடலுக்கான ட்யூனையும் விசிலடித்தே கம்போஸ் செய்து, டேப்ரிகார்டரில் பதிவு செய்தார். அதற்கு பஞ்சு அருணாசலம் அங்கேயே உடனே பாடல் எழுதினார். மறுநாள் ஸ்டுடியோவில் ஆர்கெஸ்ட்ராவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனது உதவியாளரை வீட்டிற்கு வரச்சொன்ன இளையராஜா, விசில் மூலமாக தான் பதிவு செய்திருந்த மெட்டின் டேப்பை கொடுத்துவிட்டு, ஆர்கெஸ்ட்ராவிற்குத் தேவையான மியூசிக்கை இளையராஜா எழுத ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்திற்குள் முடித்துவிட்டார். நொட்டேஷன்களை எடுத்துச் சென்ற உதவியாளர்கள் ஒத்திகை பார்த்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜானகியும் ஸ்டுடியோவிற்கு வந்து, உதவியாளர் சுந்தரராஜனிடம் பாடலை கற்றுக்கொண்ட பிறகு இளையராஜாவுக்கு ஃபோன் செய்தார்கள்.

இருவரும் ஃபோனிலேயே இளையராஜாவுக்கு பாடலைப் பாடிக் காண்பித்தார்கள். இளையராஜா சிறு சிறு திருத்தங்களை விசில் மூலமாகவே செய்தார். பிறகு வார்த்தைகளை பிரிக்கவேண்டிய முறையில் ஏற்பட்ட தவறுகளையும் இளையராஜா சுட்டிக்காட்டி சரிசெய்தார். பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்படடது. தமிழர்களின் மனதில் நிரந்தரமாக உறைந்துவிட்ட அந்த அற்புதமான பாடலை, அவ்வளவு வலியிலும், நெருக்கடியிலும் கூட இளையராஜாவால் எப்படி படைக்கமுடிந்தது? மகத்தான கலைஞர்கள், எந்த ஒரு நிலையிலும் மகத்தான படைப்புகளையே அளிக்கிறார்கள்.

தமிழர்களின் அற்புதமான காதல் கீதங்களில் ஒன்றான இப்பாடலில், “ஆஹா..ஹா…ஹா….” என்ற வரும் ஆரம்பமே, ஒரு காதல் கொண்ட மனதின் உற்சாகத்தைக் கூறிவிடுகிறது. பின்னர் வரும் சிறிய வயலின் கோவையில், அந்த உற்சாகம் தீவிர வேகமெடுப்பதை உணரலாம். பின்னர் மெலிதாக ஹம் செய்துவிட்டு, மீண்டும் வயலினில் ஒரு துளிக் காதலைச் சேர்த்துவிட்டு பாடல் ஆரம்பிக்கிறது.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன...
காதல் வாழ்க....

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லலை

அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே....
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே...
எண்ணம் யாவும் சொல்ல வா....
மயக்கமென்ன...
காதல் வாழ்க....

என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டுகொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதோ...
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே...
அன்பே இன்பம் சொல்ல வா....

(தொடரும்)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com