'இது ஒரு பொன்மாலைப் பொழுது' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 11

அறை எண்-410-ல்தான் அந்த இசைராஜாவும், கவிதை ராஜாவும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டார்கள். அங்கிருந்த கங்கை அமரன் வைரமுத்துவை இளையராஜாவிற்கு அறிமுகம் செய்தார். இருவரும் வணக்கத்தை பரிமாறிக்கொண்டனர்.
பொன்மாலைப் பொழுது
பொன்மாலைப் பொழுதுடைம்பாஸ்

நினைவே ஒரு சங்கீதம்-11

பொன்மாலைப் பொழுது: இளமைக்காலத்தின் அந்திப்பாடல்

       னக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் செல்லும் இடத்தில் இளைஞர்கள் கும்பலாக நின்றால், அங்கிருந்து நகராமல், அவர்கள் உலகம் மறந்து பேசிச் சிரிப்பதை புன்னகையுடனும்,  ஏக்கத்துடனும் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் தொலைத்துவிட்ட இளமைக்காலத்தின் மீதான ஏக்கம் அது.   அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எனது இளமைக்காலத்தின் மாலைகளுக்குள் சென்று மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட்டு வருவேன்.

1980-களின் இறுதியில் அரியலூர் கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்கும்போது நான் அம்பியாகவும், ரெமோவாகவும் ‘அன்னியன்’ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். முதலில் எனது ‘அம்பி’ வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம்.

அப்போது நான் நல்லதும், கெட்டதுமாக ஏராளமான புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன். போஃபர்ஸ் ஊழல், வி.பி.சிங், மண்டல் கமிஷன், பாபர் மசூதி விவகாரம், எம்ஜிஆர் மரணம், அதிமுக பிளவு, மீண்டும் கலைஞர் முதல்வர், விடுதலைப் புலிகள்…. என்று மிகவும் கொந்தளிப்பான அரசியல் காலகட்டம்.  அப்போது நாட்டில் நடக்கும் சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து நான் மிகுந்த அறச்சீற்றம் கொண்டவனாக இருந்தேன். எனவே ‘காந்திதாசன்’ என்ற பெயரில் சமூக அவலங்கள் குறித்து புரட்சிகரமான கவிதைகள் ஏராளமாக எழுதினேன்.

பொன்மாலைப் பொழுது
'அதிசய ராகம்: ஒரு அபூர்வ காதலின் கீதம்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 10

காந்திதாசன் என்ற அகிம்சையான பெயரை வைத்துக்கொண்டு ரத்தப்புரட்சி, அக்கினிசாட்சி, தீபிழம்பு… போன்ற வயலன்ட்டான வார்த்தைகளை பயன்படுத்தி நீள, நீளமான கவிதைகள் எழுதுவேன். தமிழ் இந்தியா டுடே இதழை அட்டை டூ அட்டை படித்துவிட்டு, நானும் நண்பன் முருகனும் மாரியம்மன்கோயில் வாசலில் கொட்டி வைத்திருக்கும் மணலில் அமர்ந்து,  அந்தி வானத்தை ரசித்தபடி எங்கள் அரசியல், சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம்.

முதலில் தமிழ்நாட்டை எப்படி சீர்திருத்துவது என்று லைட்டாக பேச ஆரம்பித்தோம். என்னுடைய சீர்திருத்த கருத்துகளை முருகன் மிகவும் ஆவலுடன் கேட்டதுடன் நிற்காமல், என்னை எப்போதும் ஒரு அறிவுஜீவியைப் பார்ப்பது போலவே  பார்க்க… எனக்கு புல்லரித்துப்போனது. எனவே நான் தமிழ்நாட்டை திருத்தினால் மட்டும் போதாது என்று கேரளா, தென்னிந்தியா, இந்தியா, தெற்காசியா… என்று எனது எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக்கொண்டேச் சென்று, கடைசியாக உலகத்தையே திருத்துவதற்கான ஆலோசனைகளை எல்லாம் சொல்ல…. முருகன் அதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருப்பான்.

இதே காலகட்டத்தில் நான் ரெமோவாகவும் வாழ்ந்து வந்ததால், ‘வானவில்லோன்’ என்ற ரொமாண்டிக்கான பெயருடன் பெண்களை அதிபயங்கரமாக வர்ணித்து காதல் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரே சமயத்தில் எனக்குள் காந்திதாசனும், வானவில்லோனும் மாறி மாறி இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

அதனால் பாலு வாத்தியார் வீட்டுக்கு ட்யூஷன் செல்லும் மாணவிகளை கண் விலக்காமல் பார்த்தபடி, ஊழலற்ற நாடாக இந்தியா மாறுவதற்கு என்னென்ன செய்யலாம் என்று தீவிரமாக விவாதிப்போம். ஒரு ஜடையை முன்பக்கமும், மற்றொரு ஜடையை பின்பக்கமும் போட்டுக்கொண்டுச் செல்லும் ஜோதியின் கிரியேட்டிவிட்டியை வியந்தபடி, நமது கல்விமுறையை மாற்றவேண்டிய அவசியம் குறித்தும் உரையாடுவோம்.

ஒரு நாள் இரவு நான் முற்றிலும்  காந்திதாசனாக மாறி, கண்களில் சுடர்விடும் சத்திய ஆவேசத்துடன் முருகனிடம்,  “கம்யூனிசம் வெறும் வர்க்கத்த மட்டும்தான் கணக்கில எடுத்துக்குது. ஜனநாயகமற்ற, கருத்துச் சுதந்திரமற்ற கம்யூனிசத்தால் உலகில் பெரும்பாலான மக்களை ஈர்க்க முடியவில்லை. எனவே ஜனநாயகமும், கருத்துச்சுதந்திரமும், அகிம்சையும், திராவிடக்கொள்கைகளும், தமிழ்மொழிப் பற்றும், கம்யூனிசமும் உள்ளடங்கிய ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கப்போகிறேன். அதுக்கு என்ன பேரு வைக்கலாம்?” என்று நான் அஸால்ட்டாக கேட்க… முருகன் வெவெலத்துவிட்டான்.

பொன்மாலைப் பொழுது
'பருவமே… புதிய பாடல் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 9

“டேய்…. அதெல்லாம் பெரிய வேலைடா…” என்று முருகன் நைஸாக நழுவ… நான் அவன் சட்டையைப் பிடித்திழுத்து, “சித்தாந்தத்த எல்லாம் நான் பாத்துக்குறேன். நம்ம நாலு சிட்டிங் உக்காந்தோம்ன்னா ஒரு நல்ல பேர பிடிச்சுடலாம்டா… கம்யூனிஸம், சோஷலிஸம் மாதிரி ஒத்தை வார்த்தையா இருந்தா அடிச்சு தூள் கிளப்பிடலாம்…” என்றேன் எதிர்சுவரில் ஒட்டியிருந்த ‘இரவுத்தாகம்’ போஸ்டரைப் பார்த்தபடி.

“சரிடா… நம்ம அப்புறம் பேசலாம்…” என்ற முருகன் விறுவிறுவென்று என்னைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

பிறகு நாங்கள் அரியலூர் பென்னிஹவுஸ் தெருவிலிருந்து அரியலூர் அண்ணாநகருக்கு குடிபோனபோது, என் பள்ளி நண்பர்களான செந்தில், விவேக், கோபி ஆகியோர் அங்கிருந்தார்கள். அத்துடன் என் தம்பி தினகரனின் நண்பர்கள் பலரும் இருந்தார்கள். வழக்கம் போல் என் தம்பியின் நண்பர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்களாகிவிட்டார்கள். மாலைகளில் தெருவில் இருக்கும் பைப்படியில் அமர்ந்து நான், தினகரன், எட்மண்ட்(எட்மண்ட் என்ற சுருக்கமான பெயரை நாங்கள் மேலும் சுருக்கி ‘எட்டு’ என்று அழைப்போம்), சார்லி, ரமேஷ் அனைவரும் பேசிக்கொண்டிருப்போம். அதிலும் எதிர் வீட்டு ரமேஷ் பார்ப்பதற்கு சற்று அப்பாவியாக, என்னைப் போல் ஒரு சமூக ஆர்வலராகவும் இருந்தான். மேலும் நான் ஒரு கவிஞன்(?)என்ற மரியாதையுடன், ஒரு சிஷ்யப்பிள்ளைப் போல் மாற்றுக் கருத்துகள் ஏதும் சொல்லாமல் நான் சொல்வதை பணிவாக கேட்டுக்கொள்வான்.

அதே சமயத்தில் தினகரனும், எட்மண்டும் நாடு குறித்த அக்கறையின்றி குஷ்பு, பானுப்ரியாவில் அக்கறையாக இருந்தனர். நானும் “வானவில்லோனாக’ இருக்கும்போது குஷ்பு, பானுப்ரியாவை ரசிப்பேன் என்றாலும், எப்போதும் என்னால் வானவில்லோனாக இருக்கமுடியாதல்லவா? ‘அந்நியன்’ படத்தில் பிரகாஷ்ராஜிடம், விக்ரம் ஒரே சமயத்தில் அம்பியாகவும், ரெமோவாகவும் மாறி மாறிப் பேசுவாரல்லவா? அதே போல் நான் ரமேஷிடமும், எட்மண்டிடமும் காந்திதாசனாகவும், வானவில்லோனாகவும் மாறி மாறி பின்வருமாறு பேசுவேன்:

ரமேஷிடம், “பெண்கள வெறும் போகப்பொருளா பாக்கிற வரைக்கும் அவங்க வாழ்க்கைல முன்னேற்றமே இருக்காது…” என்று சொல்லிவிட்டு சட்டென்று எட்மண்டிடம், “டேய்… ‘ஒரு புதிய கதை’ங்கிற பட போஸ்டர்ல ஒரு புதுப் பொண்ணு லோஹிப்போட நிக்குதே… யாருடா அது?” என்று கேட்டால், “மீனாண்ணன். நாளைக்கி போய்ட்டு வந்துடுவோம்ண்ணன்…” என்பான் எட்மண்ட் மரியாதையாக.

நான் மீண்டும் காந்திதாசனாக மாறி ரமேஷிடம் சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் குறித்து கவலைப்பட்டுவிட்டு, எட்மண்டிடம் “லட்சுமி தியேட்டர்ல இந்த வாரம் காலைக்காட்சி மலையாளப்படம் என்னடா போட்டிருக்கான்? என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரமேஷ் விடாமல், “இந்த வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க என்னதாண்ணன் பண்றது?” என்று சீரியஸாக கேட்டு என்னை காந்திதாசனாக மாற்றிவிடுவான்.  நான் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்குள், பக்கத்துத் தெரு வெள்ளைத்தாவணி கிருத்திகாவை பார்த்து கிறுகிறுத்துப் போய், சட்டென்று வானவில்லோனாக மாறிவிட்டதை இப்போது நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது.

பொன்மாலைப் பொழுது
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

வெள்ளிக்கிழமை இரவுகள் இன்னும் விசேஷம். அப்போதே எங்கள் வீட்டில் கலர் டிவி இருந்ததால் நண்பர்கள் கூட்டம் குவிந்துவிடும். நானும், ரமேஷீம் எல்லாப் பாடல்களையும் பார்க்கமாட்டோம். நாங்கள் பாட்டுக்கும் எல்லாப் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருந்தால் நாட்டை எப்படி சீர்திருத்துவது என்று வீட்டுக்கு வெளியே நின்று நானும், ரமேஷீம் பேசிக்கொண்டிருப்பாம். நடுவில் ஏதேனும் கவர்ச்சியான பாட்டு வந்தால் மட்டும் சென்று பார்ப்போம். கவர்ச்சிப் பாடல் ஒளிபரப்பாவது எங்களுக்கு எப்படி தெரிய வரும்? அதற்கு நாங்கள் புத்திசாலித்தனமாக ஒரு யுக்தியை பயன்படுத்துவோம். எங்களுக்குள் ஒரு கோட்வேர்டை உருவாக்கிக்கொண்டோம். கவர்ச்சியான பாடல் என்றால் ஃபாட்டு(Faatu). சாதாரணமான பாட்டு என்றால் ‘பாட்டு’(Paatu).

நானும், ரமேஷீம் சீரியஸாக விபி. சிங், மண்டல் கமிஷன் என்று பேசிக்கொண்டிருப்போம். முதல் பாடல் முடிந்து அடுத்தப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். நான் மண்டல் கமிஷனை அம்போவென்று விட்டுவிட்டு வீட்டினுள் பார்த்து சத்தமாக என் தம்பி தினகரனிடம்(ஆம்… தம்பியிடம்தான்), “தினகரு… பாட்டா(paata)? ஃபாட்டா(Faata)?” என்று கேட்பேன்.

அதற்கு அவன், “ஃபாட்டு…” என்று கூறினால் திடுதிடுவென்று நானும், ரமேஷீம் உள்ளே ஓடி ஃபாட்டைப் பார்த்துவிட்டு வருவோம். ‘பாட்டு’ என்றால்,  “பாட்டா?” என்று சலிப்பாக மண்டல் கமிஷனைத் தொடர்வோம். (இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனது மனைவியிடம், இந்த பாட்டு, ஃபாட்டு விஷயத்தைக் கூற…. என் மனைவி, “கருமம் பிடிச்சவனுங்களா…” என்று தலையில் அடித்துக்கொண்டாள்)

       ஒரு மனிதனின் ஒரே ஒரு இளமைக்காலத்துக்குள் இது போல் எத்தனை எத்தனை சம்பவங்கள்? எழுத, எழுத வந்துகொண்டேயிருக்கிறது. இக்கால இளைஞர்களைப் போல நாங்களும் பெண்கள் விஷயத்தில் வீக்தான். இருந்தாலும், என் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலரிடமும் ஒரு சமூக அக்கறை இருந்தது. எங்கள் தாத்தா கால காங்கிரஸ், என் அப்பா கால திமுக தலைமுறையினர் வழியாகவும், கந்தர்வன் போன்ற இடதுசாரி எழுத்தாளர்கள் மூலமாகவும் எங்களை வந்து சேர்ந்த விஷயம் அது.

        அக்காலத்திய இளைஞர்களின்  இத்தகைய மன உணர்வுகளை அற்புதமாக சித்தரித்த தமிழ்ப் பாடல் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது”. இப்பாடலிலிருந்துதான் புகழ்பெற்ற இளைராஜா-வைரமுத்து கூட்டணி உருவானது.  

அப்போது வைரமுத்து சென்னையில், தமிழ்நாடு சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியில் இருந்தார். பாரதிராஜா-இளையராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் புதிய அலைகளை எழுப்பிக்கொண்டிருந்த காலம். ஓவியர் திரு. உபால்டு மூலமாக பாரதிராஜாவை சந்தித்த கவிஞர் வைரமுத்து தனது ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ புத்தகத்தை அளித்து, “உங்கள் படங்களின் மொழி மாறிவிட்டது. இயக்கம் மாறிவிட்டது. ஒளிப்பதிவு மாறிவிட்டது. உங்கள் நடிகர்கள் வானத்திலிருந்து வராமல் பூமியிலிருந்து வருகிறார்கள். எல்லாம் மாறிவிட்டது. திரைப்படப் பாட்டின் மொழி மட்டும் மாறவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். அந்த மொழியை மாற்றிக் காட்டுகிறேன்…” என்று சொன்னார் வைரமுத்து.

மூன்று மாதம் கழிந்தது.

பொன்மாலைப் பொழுது
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

நிறை மாதமாக இருந்த வைரமுத்துவின் மனைவி பொன்மணி தலைப்பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே விடுமுறை எழுதிக் கொடுப்பதற்காக அலுவலகத்திற்குச் சென்றார் வைரமுத்து. அப்போது அவருடைய மேஜையில் வைரமுத்துவுக்கு வந்த தொலைபேசிச் செய்தியை எழுதி வைத்திருந்தார்கள். “மனோஜ் கிரியேஷன்ஸின் பாரதிராஜா படத்திற்குப் பாட்டெழுத அட்லாண்டிக் ஹோட்டல், 410 ஆம் எண் அறைக்கு வரவும்…” என்ற செய்தியைப் படித்துவிட்டு வைரமுத்து பரவசமானார். ஆனால் மருத்துவமனைக்கு வேறு செல்லவேண்டும். என்ன செய்வதென்று புரியவில்லை.

ஒரு முடிவுக்கு வந்த வைரமுத்து தொலைபேசியில் மருத்துவமனை மருத்துவரை அழைத்து, “என் உயிரை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன். எனக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு வந்திருக்கிறது. போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வைரமுத்து அட்லாண்டிக் ஹோட்டலுக்குச் சென்றார்.

அறை எண்-410-ல்தான் அந்த இசைராஜாவும், கவிதை ராஜாவும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டார்கள். அங்கிருந்த கங்கை அமரன் வைரமுத்துவை இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் புன்னகையுடன் வணக்கத்தை பரிமாறிக்கொண்டனர். சற்று நேரத்தில் சிகரெட் பிடித்தபடி வந்த பாரதிராஜா, “ஓர் இளைஞன்… இயற்கையின் நேசன். கலைகளின் காதலன். கனாக்களில் வாழ்பவன். சமூக அக்கறை உடையவன். ஒரு மாலைப்பொழுதில் இயற்கையை நேசித்தும், தன் சுயவிலாசம் சொல்லியும் பாட்டொன்று பாடுகிறான். இதுதான் சூழல். சுருக்கமாகச் சொன்னால் மாலைப்பொழுதில் கனாக் காணுகிற ஒரு லட்சியவாதி பாடும் பாட்டு. மெட்டுக்கு எழுதுவீங்களா?” என்றார்.

“மெட்டு கொடுங்க. முயற்சி செய்கிறேன்” என்றார் வைரமுத்து.

இளையராஜா ஒரு மெட்டை வாசித்துக் காட்டிவிட்டு, “சரி… நாளைக்கு பாக்கலாம்…” என்று  ஆர்மோனியத்தை மூடப்போனார். உடனே, “கொஞ்சம் பொறுங்கள். ஒரு பல்லவி வந்திருக்கிறது” என்ற வைரமுத்து

பொன்மாலைப் பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்…

என்று எழுதிவிட்டு இளையராஜாவிடம் நீட்டினார். பாடல் வரிகளை ரசித்த இளையராஜா தனது இசைக்குழுவினரைப் பார்த்து ஓகே என்பது போல் தலையாட்டுகிறார். பாரதிராஜா கீழே சென்று மேலே வருவதற்கு சரணங்களையும் எழுதிக் கொடுத்துவிட்டார் வைரமுத்து.

வைரமுத்துவின் வரிகளில் ஈர்க்கப்பட்ட இளையராஜா பாடல் வரிகளுக்கு உடனே ஓகே சொன்னார். வைரமுத்துவின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளச் சொன்னார். அதற்கு பாரதிராஜா, “இவன் இப்படி யார் நம்பரையும் வாங்கி வச்சுக்க சொல்லமாட்டான். உன் பாட்டு அவனுக்கு பிடிச்சிருச்சு… உனக்கு புதிய எதிர்காலம் காத்திருக்கிறது” என்று ஐம்பது ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டை எடுத்து வைரமுத்துவிடம் நீட்டினார். ஆனால் வைரமுத்து அதிலிருந்து ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டார்.

       எம்.எஸ்.வி-கண்ணதாசன் இணைக்கு நிகராக தமிழ் திரையிசையில் மதிக்கப்படும் இளையராஜா-வைரமுத்து ஜோடி முதன்முதலாக இணைந்தபோது ஒரு ‘பொன்மாலைப் பொழுது’ அழகாக பிரகாசித்தது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அரியலூர் மாரியம்மன் கோயில் வாசலிலும், அண்ணாநகர் பைப்படியிலும் அறச்சீற்றத்துடனும், சத்திய ஆவேசத்துடனும் கண்களில் கோபமும், கனவுகளும் பொங்க பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞனை நினைத்து சிரித்துக்கொள்வேன்.

பொன்மாலைப் பொழுது
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…

பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலை பொழுது

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்

இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா…
ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com