தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

திடீரென்று கடவுளுக்கு தமிழர்களின் மீது மிகவும் பிரியம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்யவேண்டும் என்று நினைத்தார். இசைஞானி இளையராஜாவைப் படைத்தார்.
நினைவே ஒரு சங்கீதம்
நினைவே ஒரு சங்கீதம்டைம்பாஸ்

திடீரென்று கடவுளுக்கு தமிழர்களின் மீது மிகவும் பிரியம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்யவேண்டும் என்று நினைத்தார். இசைஞானி இளையராஜாவைப் படைத்தார்.

1970-களின் இறுதியில் ஒரு நாள். என் பெரிய தம்பிக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். ஒரு காலைப்பொழுதில், அவன் நீண்ட நேரம் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தான். நானும், என் அம்மாவும் எவ்வளவோ முயற்சித்தும் அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை.

மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்த என் தந்தை, “ஏன்டி என் பிள்ளை அழறான்?” என்றபடி என் தம்பியைத் தூக்கினார். அவனை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அவனுடைய கொழுகொழுவென்ற உடலை ஆட்டி, “சின்னக்கண்ணன் அழுகிறான்...” “சின்னக்கண்ணன் அழுகிறான்...” என்று பாட... அவன் சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு சிரித்தான்.

உடனே. என் தந்தை, “சின்னக் கண்ணன் சிரிக்கிறான்...” “சின்னக்கண்ணன் சிரிக்கிறான்...” என்று மீண்டும் பாட... சின்னக்கண்ணன் மேலும் சத்தமாக சிரித்தான்.

“பிடி பிள்ளைய... ரெண்டு பிள்ளை பெத்துட்டா. இன்னும் குழந்தை அழுகைய நிறுத்தத் தெரியல...” என்று அம்மாவின் கையில் தம்பியைக் கொடுத்துவிட்டு, வெற்றுத்தோளில் துண்டுடன் என் தந்தை குளிக்கச் சென்ற கோலம், ஒரு அழியாச்சித்திரம் போல் இன்னும் என் மனதில் பதிந்திருக்கிறது.
இப்படித்தான் இசைஞானி இளையராஜா என் எட்டு வயதில் எனக்கு அறிமுகமானார். என் தம்பியை சிரிக்க வைக்க என் தந்தை பாடிய அந்தப் பாடல், ‘கவிக்குயில்’ திரைப்படத்தில் இடம் பெற்ற, “சின்னக்கண்ணன் அழைக்கிறான்...” பாடலின் மாற்றப்பட்ட வடிவம்.

அன்றிலிருந்து அந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அந்த எட்டு வயது அரியலூர் காலைதான் முதலில் நினைவுக்கு வரும். தொடர்ந்து என் தம்பியை “சிண்டு...” என்று அழைக்கும் பக்கத்து வீட்டு எக்ஸ்ரேகாரர் நினைவுக்கு வருவார். அப்படியே “சுரேந்திரம்மா... சிண்டு எந்திரிச்சுட்டானா?” என்று கேட்கும் குமார் அம்மா நினைவிற்கு வருகிறார். பிறகு... ஊஞ்சலில் அமர்ந்து டபரா செட்டில் காபிக் குடிக்கும் எதிர்வீட்டு ‘ஜெயவிலாஸ் சர்பத்’ சடகோபால் நினைவுக்கு வருகிறார்.

அப்படியே... அப்படியே... அந்தப் பாடல், எனது இருபதாண்டு கால அரியலூர் வாழ்க்கையை நான்கு நிமிடத்தில் என் கண் முன் தூக்கிப் போட்டு, “நல்லாருக்கியா சுரேந்த்ரு?” என்று கேட்கிறது. ஒரு தமிழனின் ஒட்டுமொத்த கடந்த கால வாழ்க்கையையும் நினைவுபடுத்த, ஒரே ஒரு இளையராஜா பாடல் போதுமானதாக இருக்கிறது.

அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன், பிள்ளைகளை ஹிந்தி க்ளாஸில் சேர்த்துவிட்டால், பையன்கள் பிற்காலத்தில் பிரதமரானால் உதவியாக இருக்கும் என்று பெற்றோர்கள் நம்பினார்கள். என்னையும் என் தந்தை எனது 16 வயதில் ஹிந்தி க்ளாஸில் சேர்த்தபோது, அவ்வளவு நாள் ஹிந்தி க்ளாஸில் சேராமல் இருந்ததற்காக வருத்தப்பட்டேன்.

ஹிந்தி வகுப்பில் பத்திருபது அழகிய தாவணிப் பெண்கள் சேர்ந்தாற் போல், “ஏ கிதாப் ஹை...” என்று புத்தகத்தை உயரே தூக்கிச் சொன்னபோது என் வாழ்நாள் முழுவதும் ஹிந்தி க்ளாஸ் செல்ல நான் தயாராக இருந்தேன்.

இவ்வாறு ஹிந்தியின் மீது மிகுந்த பிரியம்(?) ஏற்பட்டு, தினமும் தவறாமல் ஹிந்தி வகுப்புக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு என் வயதை ஒத்த பெண்களிடம் பேசும்போது நாக்கு குழறி, கை கால்கள் நடுங்கும் வியாதி இருந்தது. எனவே என்னைவிட வயதில் மூத்த பெண்களிடம் மட்டுமே தைரியமாக பேசுவேன். எனவே அந்த வகுப்பில் என்னைவிட ஐந்து வயது கூடுதலான வனிதாக்காவுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மட்டும் நான் நெருக்கமாக பழகினேன்.

வனிதாக்கா வகுப்பில் நுழையும்போது, கோயிலின் இருண்ட கர்ப்பகிருகத்தில் திடீரென்று தீபாராதனைக் காட்டுவது போல் வகுப்பே ஒளிரும். வயசுப் பையன்களின் மன வீணையில் சில்லென்று சில தந்திகள் மீட்டப்படும். மற்ற பெண்களின் கண்களில், “கடங்காரி…. என்னமா இருக்கா?” என்று பொறாமை ததும்பி வழியும். என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சங்கர், “கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் அழகாத்தாண்டா தெரிஞ்சாங்க. வனிதா நுழைஞ்சவுடனே எல்லாரும் ஜீரோ வாட்ஸ் பல்ப் மாதிரி டிம்மாயிட்டாங்க” என்பான். வனிதாக்கா... சந்தேகமேயின்றி பேரழகி.

ஒருநாள் வகுப்பிற்கு வந்த வனிதாக்கா சோகமாக இருந்தாள். வகுப்பு முடிந்தவுடன், “என்னக்கா டல்லா இருக்கீங்க?” என்றேன். “என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வீட்டுல கம்பெல் பண்றாங்க சுரேந்த்ரு...”
“பண்ணிக்கவேண்டியதுதானே...”
“எனக்கு மாப்பிள்ளையப் பிடிக்கவே இல்ல. நல்லா குண்டா, வயசானவர் மாதிரி இருக்காரு. லேசா தெத்துப்பல்லு வேற. ஆனா சொந்தமா ஸ்டேஷனரி கடை வச்சிருக்காராம். அதனால பண்ணிக்கோன்னாங்க. நான் கண்டிப்பா முடியாதுன்னு சொல்லிட்டேன்”
“உங்களுக்கு எப்படிக்கா மாப்பிள்ளை வேணும்?” என்றேன்.

அதற்கு வனிதாக்கா பதில் சொன்ன அந்தக் காலையை என்னால் மறக்கவே முடியாது. மொட்டை மாடியில் கூரை வேய்ந்திருந்த அந்த அறையில், வகுப்பு முடிந்து யாருமற்ற அந்தத் தனிமையில், காற்றில் தனது நீலத் தாவணி படபடக்க, தனது கூந்தல் ஜடை நுனியால் தனது உதடுகளில் வருடிக்கொண்டே “என் அழகுக்கு, நான் அழகான மாப்பிள்ளைய எதிர்பாக்கலாம்ல்ல?” என்றாள்.
“தாராளமா...”

“நான் விரும்புற மாப்பிள்ளை, நல்ல கலரா, ஹைட்டா, டிஸ்கோ கட்டிங் பண்ணிகிட்டு, ஹைக்ளாஸா இருக்கணும். பார்வைல ஒரு ரொமாண்டிக் லுக் இருக்கணும்.”
“ரொமாண்டிக் லுக்குன்னா?”
“ரொமாண்டிக் லுக்குன்னா... அத எப்படிரா சொல்றது? ம்... அதாவது... கவர்மென்ட் ஆஃபீஸ்ல சூப்ரென்ட் ஃபைல பாக்குற மாதிரி உணர்ச்சியே இல்லாம என்னைப் பாக்கக்கூடாது. ஒரு லவ்வோட... ரசனையோட பாக்கணும்.”
“ம்... அப்புறம்?”
“அப்புறம்... அவர் எப்பவும் மெதுவா இளையராஜா பாட்ட ஹம் பண்ணிகிட்டே இருக்கணும். சிரிக்கறப்ப வெறும் பல்லு மட்டும் சிரிக்கக் கூடாது. கண்ணு, மூக்கு, முகம் எல்லாம் சேர்ந்து சிரிக்கணும்...”
எனக்கு வரப் பார்த்த கொட்டாவியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

“கோபப்படறப்ப கூட அதுல ஒரு அழகு இருக்கணும்”
“கோபப்படறப்ப எப்படிக்கா அழகா இருக்கமுடியும்?”
“நீ மூன்றாம் பிறை படம் பாத்துருக்கியா? அதுல ஸ்ரீதேவி இங்க்க கீழ ஊத்தினவுடனே கமல் கோபப்படுவாரு. அந்த கோபத்துல கூட ஒரு அழகு இருக்கும். அந்த மாதிரி அழகா கோபப்படணும்.
அப்புறம்... வெளியப் போறப்ப, புடவைத் தலைப்புக்குள்ள என் கைய கோத்துகிட்டே வரணும். சினிமா பாக்குறப்ப என் தோள்ல சாஞ்சுகிட்டு படம் பாக்கணும். சன்டே, சன்டே எனக்கு மருதாணி போட்டுவிடணும். நான் பூ கட்டுறப்ப, பக்கத்துல உக்காந்து ஒவ்வொரு பூவா எடுத்து தரணும். தினம் காலைல என் காதச் செல்லமாக் கடிச்சு எழுப்பிவிடணும்...”

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

அக்கா பேசிக்கொண்டே இருந்தாள். கனவுகள்... கனவுகள்... அந்தக் காலையில் ஒரு இளம் பெண்ணின் கனவுகள், சற்று முன் அணை திறந்துவிடப்பட்ட ஒரு ஆவேச நதி போல், சுழித்துக்கொண்டு, பொங்கி, பொங்கி நுரையுடனும், பூக்களுடனும், இலைகளுடனும், சருகுகளுடனும் கரையை அடித்துக்கொண்டு ஓடிக்கொண்டேயிருந்தது. அப்போது அவள்
கண்களில் தெரிந்த பரவசத்திலிருந்து, அவளுடைய ஒவ்வொரு கனவையும் என்னால் தனித்தனியாக பிரித்து எடுத்துவிட முடியும் போல் இருந்தது.

தன் கனவுகளைச் சொல்லிக்கொண்டே வந்த வனிதாக்கா, ஒரு கணத்தில் பேச்சை நிறுத்திவிட்டு தனது அகன்ற விழிகளால் வானத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி, ஒரு ரகசியப்புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
அக்காலத்தைய இளம் பெண்களுக்கு பருவச்சிறகுகள் முளைத்தவுடன் அவர்களின் முதல் கனவு…. தங்கள் எதிர்கால காதலன் அல்லது கணவன் குறித்த கனவுதான். சற்றே கற்பனைத் திறனும், புத்திசாலித்தனமும் வாய்க்கப்பெற்ற பெண்கள் அந்தக் கனவுகளில் மிதந்துகொண்டேயிருப்பார்கள்.

ஆண்களை விட பெண்களின் கனவுகளில் ஒரு கவித்துவமும், அழகுணர்ச்சியும், அபாரமான ரொமாண்டிஸிஸமும் இருக்கும். அவர்களுடைய கனவுகளைச் சொல்வதற்கு மொழி மட்டும் போதாது.. அதைத் தாண்டி ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அந்த ஏதோ ஒன்றை இளையராஜாவால் ‘16 வயதினிலே’ படத்தில், “செந்தூரப் பூவே...” பாடலில் தர முடிந்தது.

செந்தூரப் பூவே’ பாடல் துவங்கும்போது, ஶ்ரீதேவி வெள்ளை நிறத்தாவணியில், கைகளை ஒரு பறவையின் சிறகுகள் போல் விரித்தபடி நடந்து வந்து, பின்னப்படாத கருங்கூந்தல் அசைந்தாட ஊஞ்சலில் ஆடும்போது ப்ரீலூட் இசை ஒலிக்கும் விதமே, ஒரு பெண்ணின் கனவுகளை கேட்பதற்கு நம்மைத் தயார் செய்துவிடுகிறது. முதலில் துவங்கும் வெஸ்டர்ன் கிளாஸிக்கல் கிட்டார் இசை, ஒரு பருவப்பெண் காலையில் எழுந்து சோம்பல் முறிப்பது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறது.

பின்னர் வயலின் ஒலிக்கும்போது அவள் கனவு துவங்கிவிடுகிறது. பின்னர் புல்லாங்குழல் இசை இணையும்போது கனவுகள் வளர்கின்றன. பின்னர் மீண்டும். வயலின், புல்லாங்குழல், கிட்டார்…. என்று இசைக்கும்போது, ஒரு பெண்ணின் கனவுகள் விரிவதை துல்லியமாக உணர்த்திவிட….. பாடல் ஆரம்பமாகிறது.
செந்தூரப் பூவே…
செந்தூரப் பூவே…
ஒரு பதினாறு வயது பெண், பல காலமாக மனதில் சுமந்து கொண்டு திரியும் கனவுகளை சொல்வதற்கு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை தேவைப்படுகிறது. அதற்கு மனிதர்களின் உணர்வு சார்ந்தும், இசை சார்ந்தும் ஒரு அபாரமான மேதைமை
தேவைப்படுகிறது. அந்த மேதைமையை ‘செந்தூரப் பூவே” பாடலில் இளையராஜா மகா அற்புதமாக வெளிப்படுத்தினார்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நான் நிருபன்... சொல்ல மறந்த சம்பவங்கள்! - 1

இப்பாடல் குறித்து ஆர்கெஸ்ட்ராவில் கிட்டார் வசிக்கும் நண்பர் முரளியிடம் கேட்டபோது, “அது என்னைக்கும் பதினாறு வயசோட பாடல் சார்” என்றபோது அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது இப்பாடல் இடம்பெற்ற ‘பதினாறு வயதினிலே’ படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றிக் குறிப்பிடும்போது இயக்குனர் பாரதிராஜா, “இது நம்ம படம் என்று அக்கறை எடுத்துக்கொண்டு இசையால் படத்துக்கு ரத்தமும் நாளமுமாய் இருந்தவர் இளையராஜா. அவர் இல்லாவிட்டால் படத்தின் பாதி பெருமை குறைந்திருக்கும்.“ என்கிறார்.

பதினாறு வயதினிலே திரைப்படத்திற்கு இசையமைத்தது பற்றி இளையராஜா, “இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப் படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப் படத்தில் இருந்து நமது பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது” என்று கூறியுள்ளார்.
‘செந்தூரப்பூவே’ பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா, “அந்தப் பாடல் காட்சிக்கு சில டியூன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டியூனை

போட… அது பாரதிக்கு பிடித்திருந்தது. 'இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து(அப்போது கவிஞர் என்றாலே கண்ணதாசன்தான்) பாட்டு எழுதச் சொல்லலாமா?' என்று பாரதியிடம் கேட்டேன். 'புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம். ஏன் அமரனே எழுதட்டுமே' என்றார் பாரதி. அமரும் டியூனைக் கேட்டுவிட்டு 'செந்தூரப்பூவே' பாடலை எழுதினான். எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது. செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா? இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம்.

அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான். ‘சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம்’ என்று `செந்தூரப்பூ; சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம்” என்று கூறியிருக்கிறார்.

1977-ல் பாடல் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. தேவதைகளின் நிறமான வெள்ளை நிற உடையில் ஶ்ரீதேவி தனது கனவுகளைச் சொன்னபோது தமிழ்நாட்டின் அனைத்துப் பெண்களும் அதனை தங்களோடு அடையாளப்படுத்திக்கொண்டார்கள். நடிகர் சிவாஜியால் இப்பாடல் “தனக்கு மிகவும் பிடித்த பாடல்” என்று புகழப்பட்டது.

இப்பாடலுக்காக எஸ்.ஜானகி சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றார். மிகவும் கடுமையான இசை விமர்சகரான சுப்புடு இப்பாடல் குறித்து, “இளையராஜா என்ன மாயம் செய்தாரோ? இப்பாடல் மெதுவாக உள்ளத்தை எங்கோ அழைத்துச் செல்கிறது” என்று கூறியுள்ளார். இப்போதும் இப்பாடலை கேட்கும்போதேல்லாம் மனம் பாடலிலிருந்து விலகி, வனிதாக்காவை நினைக்க ஆரம்பித்துவிடும். அவள் தந்தைக்கு வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு, வீட்டுச் சூழ்நிலையால் கடைசியில் அவள் அழகில்லாத மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொண்டாள்.

நான் திருமணத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். மாப்பிள்ளை மிகவும் சுமாராகத்தான் இருந்தார். இந்த ‘மிகவும் சுமாராக’ என்பது கூட அவர் வனிதாக்காவின் கணவர் என்பதால் நான் கொடுக்கும் சலுகை. நல்ல தெத்துப்பல். கன்னங்கள் ஒடுங்கி, மீசையின்றி, கை, காலெல்லாம் குச்சிப் போல் இருந்தது. ஏனோ எனக்கு அழுகை வருவது போல் இருந்தது. அக்கா மணமேடைக்கு வந்தபோது அவளின் கண்களை உற்றுப் பார்த்தேன். கனவுகள் இறந்த கண்கள் அப்படித்தான் இருக்கும்.

புரோகிதர் அக்காவிடம் தீயில் நெய்யை ஊற்றச் சொன்னார். அக்கா நெய் ஊற்ற…. திகுதிகுவென்று எரிந்த தீயில் வனிதாக்காவின் கனவுகள் கருகி, புகையாகி மேலே போவது போல் இருந்தது. என் பார்வையில், ‘செந்தூரப்பூவே” பாடல், ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் கனவுப் பாடல் மட்டும் அல்ல. எனது வனிதாக்காவின் கனவுகள் பொய்த்துப்போனதின் பாடலும் கூட. இப்போது வனிதாக்கா தன்னைப் பற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதப்படுவதை அறியாது, காதோர முடிகள் நரைத்திருக்க… வயது மூப்பால் குலைந்துபோயிருக்கும் தனது அழகை கண்ணாடியில் பார்த்தபடி இப்பாடலை கேட்கும்போது, வனிதாக்காவின் முகத்தில் விரியும் கசப்பான புன்னகையை என்னால் இங்கிருந்தே மானசீகமாக பார்க்கமுடிகிறது.

செந்தூரப் பூவே... செந்தூரப் பூவே...
சில்லென்ற காற்றே...
என் மன்னன் எங்கே?
என் மன்னன் எங்கே?

நீ கொஞ்சம் சொல்லாயோ...

தென்றலை தூதுவிட்டு
ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே...
என்னை இழுக்குது அந்த நினைவதுவே..
வண்ணப் பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ?

நீலக் கருங்குயிலே...
தென்னஞ்சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே
நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ?

செந்தூரப் பூவே…. செந்தூரப் பூவே

(தொடரும்)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com