'டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 8

'கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும். காதலித்து வேதனையில் சாகவேண்டும்' என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். 'கடவுள் எப்படி சாகமுடியும்? கடவுள் அழிவில்லாதவன் இல்லையா? இதுபோல் பாடமாட்டேன்' என்றார் டி.எம்.எஸ்.
கண்ணதாசன்
கண்ணதாசன்டைம்பாஸ்

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்: டி.எம்.எஸ். பாட மறுத்த கண்ணதாசனின் பாடல்

        

காதல் தோல்வி காலம், ஆண்களின் கண்ணீர் காலம். மரண வீடுகளைத் தவிர காதல் தோல்வியின் போது மட்டுமே ஆண்கள் அழுகிறார்கள். வாழ்க்கையில் எத்தனையோ துயர்களைச் சந்தித்தபோதும் கண்ணீர் விடாத, எனது மனஉறுதி மிக்க நண்பர்கள் பலர் காதல் தோல்வியில் உடைந்துபோய் அழுவதைப் பார்த்திருக்கிறேன்.

என் நண்பன் ரமேஷ் ஒரு டீக்கடையில் பத்து பேர் வேடிக்கைப் பார்க்க என்னிடம் அழுதிருக்கிறான். இன்னொரு நண்பன் ஊட்டியிலிருந்து வரும்போது தனது காதல் கதையைச் சொல்லும்போது என் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறான். நண்பன் கதிர் திருச்சி காவேரி ஆற்றுப் பாலத்திற்கு கீழ், காதலி கடைசியாய் எழுதிய ‘என்னை மறந்துவிடு’ கடிதத்தை தனது முகத்தில் மூடிக்கொண்டு கதறி கதறி அழுதிருக்கிறான்.

நானும் அழுதேன். எனது காதலி என்னிடமிருந்து பிரிந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு ஒரு மாபெரும் கண்ணீர் காலத்தைக் கடக்கவேண்டியிருந்தது. மறுநாள் அலுவலகத்தில் என் நண்பர்கள் திருஞானத்திடமும், விமலாவிடமும் நடந்த விஷயங்களைச் சொன்னபோது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். அழுகை பொங்கிக்கொண்டு வர… ரெக்கார்ட் ரூமுக்குள் சென்று கதறி கதறி அழுதேன்.

அதற்கு பிறகு வந்த நாட்களில், ஏதேனும் ஒரு வழியில் எனது காதலியைச் சந்தித்துவிட மாட்டோமா என்று துடித்தேன். எப்படியாவது சினிமா போல் அதிரடியாக சேர்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் அந்தரங்கமாக இருந்துகொண்டே இருந்தது. அவள் படிக்கும் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் மறைவாக நின்றுகொண்டு பார்ப்பேன்.

என் விஷயத்திற்குப் பிறகு, அவள் வீட்டில் யாரேனும் ஒருவர் அவளுடன் காரில் வந்து விட்டுவிட்டுச் சென்றனர். கல்லூரி முடிந்து அழைத்துச் செல்லும்போதும் ஆட்கள் வந்தனர். எனவே என் தோழி ஒருத்தியை கல்லூரி லஞ்ச் பிரேக்கில் அவளைச் சந்திக்கச் சொல்லி அனுப்பினேன். என்னிடம் சொன்னதையே என் தோழியிடமும் சொல்லியனுப்பினாள். அப்போதும் மனம் தளரவில்லை.

கண்ணதாசன்
'மணிரத்னம் தவிர்க்க நினைத்த பாடல்' - நினைவே ஒரு சங்கீதம்|Epi 7

அவளது நெருங்கிய தோழி ஒருத்தி ராணி மேரிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து விசாரிக்கலாம் என்று ஒரு நாள் ராணி மேரி கல்லூரி பஸ்ஸ்டாப்பில் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தேன். அருகில்தான் ஐ.ஜி. ஆபிஸ் என்பதால் அங்கிருந்து என்னைப் பார்த்த காவலர் ஒருவர், நான் ஏதோ பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்துக்கொண்டு என்னருகில் வந்தார். “லேடிஸ் காலேஜ் பஸ் ஸ்டாப்ல எதுக்குடா இவ்ளோ நேரம் நிக்கிற?” என்று கடுமையான வார்த்தைகளில் விசாரித்தார்.

ஒரு உறவினரைச் சந்திக்க காத்திருப்பதாகச் சொன்னேன். எனது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்தும், அவருக்கு சந்தேகம் விலகவில்லை. தொடர்ந்து  என்னை அசிங்கமாகத் திட்டி, “இனிமே இந்தப் பக்கம் பாத்தேன்… தூக்கி உள்ள வச்சிடுவேன்…” என்று மிரட்டி அனுப்பினார்.

 இதையெல்லாம் விட மிகவும் கொடுமையான விஷயம், இரவுகளில் தூக்கம் வராமல் தவித்ததுதான். கிட்டத்தட்ட ஆறு மாத காலம் தூக்கமின்றி அவதிப்பட்டேன். இரவு படுப்பேன். லேசாக கண் அசரும். ஒரு பத்து நிமிஷம் தூங்கினால் அதிசயம். சட்டென்று யாரோ பிடித்து எழுப்பியது போல் விழிப்பு வந்துவிடும். அதன் பிறகு விடிய விடிய பொட்டுத் தூக்கம் வராது.

தூக்கம் வராமல் புத்தகத்தை எடுத்துப் படித்தால் ஒரு வரியில் கூட மனம் செல்லாது.  எனவே அறை வாசலில் அமர்ந்து வரிசையாக சிகரெட்டுகளை பிடித்துக்கொண்டிருப்பேன். தூக்கம் கலைந்து எழும் என் அறைத்தோழன் நாராயணன், “இந்நேரம் அவ நிம்மதியா படுத்து தூங்கிட்டிருப்பாடா. நீ என்னா மயித்துக்குடா இப்படி உன் உடம்பக் கெடுத்துக்கிற?” என்று சத்தம் போடுவான்.

நாளாக நாளாக தூக்கப் பிரச்னை அதிகரித்தது. விழித்திருந்து தம்மடித்தால் நாராயணன் திட்டுவான். மேலும் தூங்காமல் அப்படியே படுத்துக்கொண்டிருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் என்று நள்ளிரவுகளில் எழுந்து சாலைக்கு வந்துவிடுவேன். மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர் என்று விடிய விடிய பைத்தியம் போல் சாலைகளில் நடந்துகொண்டேயிருப்பேன்.

இரவு ரோந்து வரும் போலீஸ்காரர்களால் சில சமயங்களில் விசாரிக்கப்பட்டிருக்கிறேன். சில நாட்கள் பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்று, கண்ணீருடன் வானத்தைப் பார்த்தபடி, கடல் அலைகளின் சத்தத்தை கேட்டுக்கொண்டிருப்பேன். சில இரவுகளில் பூட்டியிருக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரேயிருக்கும் மண்டபத்தில் படுத்தபடி கோயில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனது வாழ்க்கையின் மிகவும் கொடுமையான நாட்கள் அவை.

கண்ணதாசன்
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

அப்போதெல்லாம் என் மனதிற்குள் இருந்த கேள்வி, ஒன்றே ஒன்றுதான். எப்படி அவளால் முடிந்தது? எவ்வளவு பேசியிருக்கிறாள்? அவ்வளவு பேசிவிட்டு எப்படிச் சட்டென்று காலில் ஒட்டிக்கொண்ட ஈரக்காகிதத்தை உதறுவது போல் மிகச் சுலபமாக என்னை உதறி விடமுடிந்தது.

சினிமாக்களில் வருவது போல் அவள் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

“நீ இல்லாத ஒரு லைஃப நெனச்சு கூட பாக்கமுடியாதுரா…”

“கல்யாணமான பிறகு நீ வேலைக்கெல்லாம் போகக்கூடாது. எப்பவும் என் கூடவே இருக்கணும்…”

“நமக்கு பெண் குழந்தை பிறந்தா சஹானான்னு பேர் வைக்கணும்…”

“எத்தனை நிமிஷம் நீ என் முகத்தை தொடர்ச்சியா பாக்கறன்னு பாக்கலாமா?” என்று அவள் ஒரு முறைக் கேட்டபோது தொடர்ந்து ஏழு நிமிடங்கள் நான் பார்த்து, அவள் அலுத்துப்போய் எழுந்துவிட்டாள்.

எவ்வளவு காதல்?எவ்வளவு பேச்சு?எவ்வளவு சிரிப்பு?எவ்வளவு கனவுகள்? அத்தனையும் பொய்யா? இப்படி ஒரு துயரத்தில் என்னை தள்ளிவிட்டு எப்படி அவளால் நிம்மதியாக இருக்கமுடிகிறது? என்றெல்லாம் நினைக்க நினைக்க அவள் மீது மட்டுமல்ல. பெண் இனத்தின் மீதே வெறுப்பாக இருக்கும்.

இதே போல் எல்லா ஆண்களும் தங்கள் காதல் தோல்வி காலகட்டத்தில் பெண் இனத்தையே வெறுத்திருப்பார்கள். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கடவுளைத் திட்டுவார்கள். ஆண்களின் இந்த சோகமும், கோபமும் கலந்த உணர்வையும், காதல் தோல்வி காலத்தில் ஆண்களின் மனத்தில் ஏற்படும் அலைக்கழிப்பையும் தமிழின் மகா கவிஞனான கண்ணதாசன் பாடலாக்கியிருக்கிறார்.

1963ல் கண்ணதாசன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாக வெளிவந்த ‘வானம்பாடி’ படத்தில் இடம்பெற்ற “கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்” என்ற பாடல், காதல் தோல்வியால் பெண்ணினத்தை தாக்கி வெளிவரும் இன்றைய அனைத்துப் பாடல்களுக்கும் முன்னோடி ஆகும்.  

எந்தளவு இந்தப் பாடல் புகழ்பெற்றிருக்கிறது என்றால், சமீபத்தில் எனது 23 வயது மகன் ஒருநாள் இந்தப் பாடலை யூட்யூபில் போட்டுக் காண்பித்து, “யாரு எழுதினது இது?” என்றான்.

“கண்ணதாசன்…” என்றேன்.

“மனுஷன் அனுபவிச்சு எழுதியிருக்காரு…” என்று அவன் கூறியவுடன், “பய எங்கயோ செமையா அடி வாங்கியிருக்கான்…” என்று நினைத்துக்கொண்டு, “என்னடா… நீயும் சிக்கிட்டியா?”  என்றேன் அவள் தோளில் கைவைத்து.

“சே… சே… என் ஃப்ரண்டு ஒருத்தன் ரீஸன்ட்டா லவ் ஃபெயிலியராயிருக்கான். இந்த மாதிரிப் பாட்டா தேடிக் தேடிக் கண்டுபிடிச்சு கேட்டு எங்களுக்கு அனுப்புறான்…” என்றான். பெண்ணினத்தை கடுமையாக தாக்கி கண்ணதாசன் எழுதிய வரிகளே அந்தப் பாடலை 2K கிட்ஸ் வரைக் கொண்டு சேர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராக நான் கருதும் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான் இப்பாடலுக்கான இசை. அவருடைய “மாமா… மாமா… மாமா…” என்ற புகழ்பெற்றப் பாடல் காரணமாக திரையுலகினரால், “மாமா” என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். 1918-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் திரு.கே.வி.மகாதேவன்.  

1942-ல் ‘மனோன்மணி’ திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது திரை இசைப்பயணம் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் நீண்டது. திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கு பிறகு கூட, 1992-ல் தனது ‘ஸ்வாதிகிரணம்’ தெலுங்கு படத்திற்காக சிறந்த இசைக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார். இந்திய ஜனாதிபதி விருதுகளில் முதன்முதலாக ‘சிறந்த இசை’க்கான விருது அறிவிக்கப்பட்டபோது, 1967 ஆம் ஆண்டு அதை முதன்முதலாக பெற்றவர் திரு.கே.வி. மகாதேவன்தான். ‘கந்தன் கருணை’ படத்திற்காக அந்த விருதைப் பெற்ற கே.வி. மகாதேவன், பின்னர் 1980 ஆம் ஆண்டு ‘சங்கராபரணம்’ படத்திற்காகவும் தேசிய விருது பெற்றார்.

கண்ணதாசன்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

கே.வி.மகாதேவனின் முக்கியமான தனித்துவம் என்னவென்றால், ஏறத்தாழ அவருடைய அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே எழுதப்பட்டு பின்னர் மெட்டு போடப்பட்டவைதான். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களுக்கு மெட்டு போடுவது எவ்வளவு கடினமான காரியம் என்று திரையிசைக் கலைஞர்களுக்குத் தெரியும்.

கே.வி.மகாதேவன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏறத்தாழ 600 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  எம்.எஸ்.விஸ்வநாதனின் சமகாலத்தவராக இருந்தாலும்,  எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மகா தீபத்திற்க்கு முன்பு, கே.வி.மகாதேவனின் புகழ் வெளிச்சம் சற்று மங்கலாகத்தான் இருந்தது.

வாலி ஏதேனும் நல்ல பாடல்கள் எழுதிவிட்டால், பலரும் அதை கண்ணதாசன் எழுதியது என்று நினைப்பது போல், நானும் பழைய நல்ல பாடல்கள் அனைத்திற்கும் இசை எம்.எஸ்.விஸ்வநாதன்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  “தில்லானா மோகனாம்பாள்” ‘அடிமைப் பெண்’ ‘வசந்த மாளிகை” போன்ற பல வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்தான் என்ற விபரம் எனக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.

கே.வி.மகாதேவனின் அற்புதமான இசையமைப்பில் வந்த படங்களுள் ஒன்று எஸ்.எஸ். ராஜேந்திரன், தேவிகா நடிப்பில் வெளிவந்த ‘வானம்பாடி”. ‘வானம்பாடி’ திரைப்படம் கண்ணதாசனின் சொந்தப் படம் என்பதால் அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதியிருந்தார். அப்படத்தில் “ஏட்டில் எழுதி வைத்தேன்”, “கங்கை கரைத் தோட்டம்…”, “தூக்கணாங் குருவி கூடு…’ என்று பல புகழ்பெற்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்படத்தில் இடம் பெற்று, 2K கிட்ஸ்  மனதிலும் இடம் பிடித்திருக்கும் பாடல், ‘கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்”.

எனது காதல் தோல்வி காலகட்டத்திலும், அப்பாடல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடலாக இருந்தது. அப்பாடலில் வரும், “எத்தனை பெண் படைத்தான்…. எல்லோர்க்கும் கண் படைத்தான். அத்தனை கண்களிலும் ஆசையென்னும் விஷம் கொடுத்தான்…” என்ற வரிகளை எல்லாம் கேட்டு சிலிர்த்துப்போயிருக்கிறேன். ஆனால் இவ்வளவு அற்புதமான இந்தப் பாடல் எழுதப்பட்டபோது பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் அப்பாடலை பாட மறுத்திருக்கிறார். ஏன்?

கண்ணதாசன்
'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 6

பாடல் பதிவின் போது இப்பாடலைப் படித்த டி.எம்.எஸ், “ஹீரோ முட்டாள்தனமாக நடந்துகொண்டு கடவுளை ஏன் திட்டவேண்டும்? இவ்வாறு கடவுளைத் திட்டி எழுதுவதை எல்லாம் நான் பாடமுடியாது.” என்று கூறியிருக்கிறார். கே.வி.மகாதேவனும், கண்ணதாசனும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் கேட்கவில்லை. 

நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு அப்பாடலைப் பாட ஒப்புக்கொண்ட டி.எம்.எஸ். ஒரு குறிப்பிட்ட வரியைக் கடுமையாக ஆட்சேபித்தார். “கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும். அவன் காதலித்து வேதனையில் சாகவேண்டும்…” என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். அதற்கு டிஎம்ஸ், “கடவுள் எப்படி சாகமுடியும்? கடவுள் அழிவில்லாதவன் இல்லையா? எனவே கடவுள் சாகவேண்டும் என்பது போல் நான் பாடமாட்டேன்…” என்று டி.எம்.எஸ்.

உறுதியாக மறுத்துவிட்டார். எனவே வேறு வழியின்றி கண்ணதாசன், “அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்…” என்று மாற்றினார். ‘சாகவேண்டும்’ என்பதை ‘வாடவேண்டும்’ என்ற மாற்றிய பிறகுதான் டி.எம்.எஸ். அப்பாடலைப் பாடியிருக்கிறார். இதை சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு மேடை நிகழ்ச்சியில் டி.எம்.சௌந்திரராஜனே கூறியிருக்கிறார். அவ்வாறு கடும் விவாதத்திற்கு பிறகு அரங்கேறிய பாடல், இன்று ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு பிறகும் கேட்கப்பட்டுக்கொண்டிருப்பதே அப்பாடலுக்கு கிடைத்த வெற்றி.

கண்ணதாசன்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்

கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்

அதை ஊரெங்கும்
தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்


கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி அவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்

கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்

(தொடரும்)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com