'விடாமல் துரத்தும் விஜயகாந்த்' - வெளியூர் பஸ் அட்ராசிட்டீஸ்

கண்டக்டரா இருந்து சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி படம்கூட அதிகமாய் இல்லாமல், விஜயகாந்த் படம் பஸ்ஸில் ஓடும் சூட்சுமம் புரிந்ததே இல்லை.
விஜயகாந்த்
விஜயகாந்த்டைம்பாஸ்

காலேஜ் படித்த காலத்தில் விடுமுறை தினங்களை முன்னிட்டு மதுரை டு சென்னை பஸ் ஏறுவோம். ஊருக்குப் போகிற குஷியில் பஸ் ஏறினால், அங்கே ஒரு மொக்கை டி.வியில் ஒரு மொக்கைப் படத்தில் கேப்டன் விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளைச் சொழட்டி சொழட்டி அடிப்பார். எப்போது ஊருக்குப் போனாலும் பஸ்ஸில் ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’, ‘நரசிம்மா’ ( 3 இன் ஒன் டி.வி.டி) ஓடும். மதுரை முதல் விழுப்புரம் வரை இந்த அக்கப்போர் தொடரும்.

இப்படி ‘எங்கெங்கு காணினும் கேப்டனடா’ என்ற ரீதியில் எல்லா இடத்திலும் கேப்டன் இருப்பார். கண்டக்டரா இருந்து சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி படம்கூட அதிகமாய் இல்லாமல், விஜயகாந்த் படம் பஸ்ஸில் ஓடும் சூட்சுமம் புரிந்ததே இல்லை. இதில் அதைவிடக் கொடுமை பஸ் மதுரை டு சென்னை போவதற்குள் மூன்று இடங்களில் நிற்கும்.

* கொட்டாம்பட்டி (இளநீர் கடை, ஆம் ஆத்மியின் வெற்றியை அன்றே சொன்ன துடைப்பைக்கட்டை தோசை ஹோட்டல்)

* தொழுதூர் (டப்பிங் /ரீமிக்ஸ் பாடல்களை சத்தமாய் ஒலிபரப்பும் ஹோட்டல்)

விஜயகாந்த்
HBD Captain: 'கைதி டில்லியாக கேப்டன் விஜயகாந்த்'

* விக்கிரவாண்டி இந்தப் பகுதியில் மேயும் மாடுகள் நிறையத் தண்ணீர் குடிப்பதால் வெறும் தண்ணிப்-பால்தான் கறக்கும். அந்தத் தண்ணிப் பாலில்/பால் போன்ற தண்ணியில் (பின்-நவீனத்துவம் பாஸ்... இப்படித்தான் பேசுவோம்) 10 ரூபாய்க்கு கழனித் தண்ணி மாதிரி ஒரு டீ குடித்துவிட்டு பஸ்ஸில் ஏறினால், மீண்டும் கேப்டன் சிரிப்பார்.

ஒரு திராபையான விஷயம் என்னவென்றால், கொட்டாம்பட்டியில் டூயட் பாடிய கேப்டன், திருச்சி தாண்டி அரியலூர் வரும் வேளையில் சென்டிமென்டில் ரவுசு கூட்டுவார். அப்புறம் வேறு ஒரு படத்தில் மறுபடியும் டூயட்.

இது ஒரு பக்கம் என்றால், தீபாவளி மாதிரி கூட்டம் நிறைந்த நாட்களில் யோசிக்காமல் ஏ.சி. வசதியுள்ள அரசு பஸ்ஸில் ஏறுவோம்.

செமஸ்டர் லீவ்/ஸ்டடி லீவ் வேறு டிசம்பரில் வரும். உச்ச்சக் குளிர் மாசம். இறைவன் மனிதரின் உடம்பில் குடிகொண்டுள்ளார் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வருண பகவான் அடிவயிற்றில் ஆனந்த நர்த்தனம் புரிவார்.

விஜயகாந்த்
'விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ்..!' - இது லோகேஷ் கனகராஜின் 90's VERSE

சனியன் புடிச்ச கண்டக்டர் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தச் சொன்னால், ‘எத்தனை வாட்டி நிறுத்துறது?’ என்று எரிந்து விழுவார்.

ஐம்புலனும் அடக்கி ஒரு ஜென் நிலைக்குச் சென்று அடக்கும் நேரத்தில் ‘ஏய்ய்... தாய் நாட்டையாடா காட்டிக் குடுக்குறே? தேசத் துரோகி’ என்று கேப்டன் ஆத்திரத்தில் கத்துவார். இவ்வளவு நேரம் அடக்கிய நமக்குத் தூக்கிவாரிப் போட்டு, கடைசியில் ‘போக்கிரி’ வடிவேலு போல ஆனாலும் ஆகிவிடும்.

இது மாதிரியான பேருந்துப் பயணங்களில் டார்ச்சர் தருவதற்கென்றே இருக்கும் சில பேர்வழிகள் :

* கடுங்குளிரிலும் ஜன்னல் திறக்கும் ஜாம்பவான்கள்.

* ஏ.சி. பஸ்ஸில் பூரி மசாலா பார்சலைத் திறந்து நறுமணம் பரப்பும் நல்லவர்கள்.

* ‘ஹலோ... ஹலோ... இங்கே டவர் சரியா கெடைக்கல’ னு கத்தும் சஞ்சய் ராமசாமிகள். (சத்தமாப் பேசுனா டவர் கெடைக்கும்னு யாருய்யா உங்களுக்குச் சொன்னது? )

டி.வி. சீரியல்களில் ஏழை அப்பாக்களுக்கு இருக்கும் மனோ வலிமை, புத்தனை மீறிய ஜென் நிலை இதை எல்லாம் தரவல்லது, ஒரு மதுரை டு சென்னை பஸ் பயணம்!

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com