Sachin : சிட்னி மைதான நுழைவு வாயிலுக்கு சச்சின் பெயர் சூட்டிய Australia கிரிக்கெட் வாரியம் !
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் தெண்டுல்கரையும், மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவனான வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவையும் கவுரவப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சூட்டியுள்ளது.

இதுகுறித்து சச்சின் பேசுகையில், "சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெளிநாட்டு அணி வீரர்கள் செல்லும் நுழைவு வாயிலுக்கு எனது பெயரையும், எனது நண்பர் லாராவின் பெயரையும் சூட்டி இருப்பது மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதற்காக சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்தினருக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி. விரைவில் சிட்னி மைதானத்துக்கு செல்வதை எதிர்நோக்குகிறேன்" என்று கூறியுள்ளார். இதேபோல், பிரைன் லாராவும் தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்.
சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள சச்சின், 3 சதம் உள்பட 785 ரன்கள் எடுத்துள்ளார். 2004ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில், ஆட்டம் இழக்காமல் 241 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவுக்கு வெளியே தனது பிடித்தமான கிரிக்கெட் மைதானம் சிட்னி தான் என்று சச்சின் கூறியுள்ளார்.
4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரையன் லாரா, அதில் 384 ரன்கள் எடுத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு அவர் இந்த மைதானத்தில் 277 ரன்கள் குவித்து இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

சச்சின் நேற்று தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். மறுபுறம். பிரைன் லாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னியில் அடித்து, நேற்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது. இரண்டையும் ஒருசேர நினைவு கூறும் விதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர்களை கவுரவித்து இருக்கிறது.