
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இப்போதும் கூட மதுப்பிரியர்கள் பல இடங்களில் ‘தக் லைஃப்’ சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு மதுப்பிரியர் சுமார் 60 அடிக்கு உயரம் கொண்ட பனைமரத்தின் உச்சியில் ஏறி மதுகுடித்து அப்படியே தூங்கிவிட்டார்.
ஆனைமலை அருகே உள்ள செமணாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாய நிலங்களில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் மது அருந்துவது வழக்கம். அப்படி மது குடித்துவிட்டு பனைமரத்தில் ஏறி முரட்டு தூக்கம் போட்டுவிட்டார்.
‘என்ன ரொம்ப நேரமா ஒரே பொசிஸன்ல இருக்காரே’ என சந்தேகமடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, ‘இவங்க இம்சை தாங்க முடியல’ என லட்சுமணனை அழைத்துள்ளனர்.
‘ஆத்தி.. ஒரு உற்சாகத்துல மேல வந்துட்டேன்.. இப்ப எப்படி இறங்குறதுனு தெரியலயே’ என்பது போல லட்சு ஜெர்க் ஆகியுள்ளார். எல்லாம் தலை எழுத்து என காவல்துறை, தீயணைப்புத்துறையை அழைத்துள்ளனர்.
அவர்கள் கயிறு மற்றும் வலை மூலம் அவரை கீழே மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மிஷன் ஃபெயிலியர் ஆகிவிட்டது. இதையடுத்து கிரேன் உதவியுடன் போராடி ஒரு மணிநேரம் கழித்து அவரை மீட்டனர்.
- குரு பிரசாத்.