'இது பொன்னியின் மாமியார்' - மாமியார்கள் செய்யும் சேட்டைகள்

அந்தக் கால மாமியார்ஸ் மாதிரி கேஸை தொறந்துவிடுற அளவுக்கு இந்தக் கால மம்மி இன் லா-க்களுக்கு அள்ளு இல்லைன்னாலும், சேட்டைங்க குறைஞ்சபாடில்லை.
இது பொன்னியின் மாமியார்
இது பொன்னியின் மாமியார்இது பொன்னியின் மாமியார்

அந்தக் கால மாமியார்ஸ் மாதிரி கேஸை தொறந்துவிடுற அளவுக்கு இந்தக் கால மம்மி இன் லா-க்களுக்கு அள்ளு இல்லைன்னாலும், சேட்டைங்க குறைஞ்சபாடில்லை. அந்த சேட்டைங்களுக்கு சூழ்நிலைகளே சில நேரங்களில் டிட் ஃபார் டாட் செஞ்சுடும். அதுவும், சம்பந்தப்பட்ட மருமக முன்னாடியே அது நிகழும் பாருங்க: அதுதான் 'கடவுள் இருக்கிறான்டா' மொமென்ட்.

அந்த மாதிரி சில மெமொன்ட்ஸைதான் இந்தக் கட்டுரையில சொல்லப் போறேன். 'நாங்க ஒண்ணும் அப்படியாபட்டவங்க கிடையாது'ன்னு கோபப்படுற வெரி குட் மதர் இன் லாஸ், என்னைய பெத்த மவளா நினைச்சு மன்னிச்சி, மறக்காம மொத்த கட்டுரையையும் படிச்சு ஒத்த வியூஸையும் கொடுத்துட்டு போயிடுங்க. இனி, சேட்டைகள் பராக்... பராக்...பராக்..!

குறிப்பு: எல்லா சப் டைட்டில்களையும் சின்சான் வாய்ஸ்ல படிக்கணும்.

அத்தை லஞ்சுக்கு இட்லி சாப்பிடுறாங்களாம்!

உச்சி வெயில் ஃபுல் மீல்ஸை வீட்டுக்கு வந்து ஃபுல் கட்டுக் கட்ட முடிஞ்ச புருசனை அடைஞ்ச பொஞ்சாதிகள் மட்டுமே இந்த சேட்டையை கண்டு களிச்சிருக்க முடியும்.

வாசல்ல மகர் பைக் சத்தம் கேட்டதும், அதுவரைக்கும் சோபாவும் ரிமோட்டுமா பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட களைப்புல சயனிச்சிட்டிருந்தவங்க சிட்டி ரோபா கணக்கா படக்குனு எழுந்திருச்சு, படார்னு ஃபிரிட்ஜை தொறப்பாங்க. மகரோட பாதி, அதாவது நானு, 'ஆங்'னு வாயைத் தொறந்து மூடுறதுக்குள்ள காலையில மிச்சமான இட்லி, தொட்டுக்க ஜிலு ஜிலுன்னு சட்னியை எடுத்து வெச்சிட்டு சாப்பிட ஆரம்பிப்பாங்க. அந்த நேரம்தான் மகர் கரெக்ட்ரா வீட்டுக்குள்ள வருவார்.

என்னா டைமிங்? 'அம்மா மா மா... டிபனே இப்ப தான் சாப்பிடுறியா...' என்று நாபி கமலத்திலிருந்து மகர் கேட்க, ஜில்லுனு இட்லியும் சட்னியும் பல்லை கூச வைக்கிற கொடுமை தாங்காம நினைத்தாலே இனிக்கும் ஜெயபிரதா மாதிரியே குத்து மதிப்பா மதர் தலையை ஆட்ட... அப்ப உள்ளுக்குள்ள் பொங்கும் பாருங்க, அதெல்லாம் வேற லெவல் ஃபீல்ங்க!

நாத்தனாரும் மாமியாரும் போன்ல பேசிக்கிறாங்களாம்...

'எங்க அப்பார்ட்மென்ட் கீழ் வீட்ல ஒரு குடிகாரப்பையன் இருக்கான்டி. டெய்லி பொண்டாடியை திட்டிக்கிட்டு, அடிச்சிக்கிட்டுன்னு... கட்டையில போறவன் கையை ஒடிச்சு கேஸ் ஸ்டவ்வுல வைக்கணும்.

அந்தப் பொண்ணு அழறது பார்க்க சகிக்கல. ம்ஹும்... நான் பெத்ததும்தான் இருக்கே... பொண்டாட்டியை என்னா தாங்கு தாங்குது. சரியான பொண்டாட்டிதாசன்.'

- மருமகளை மகன் அடிக்கலையேன்னு வருத்தப்படுற அந்த மனசு இருக்கு பாருங்க... அது ரொம்ப வெள்ளந்தியானது. பாருங்க, அடிமனசுல இருக்கிறதை பக்கத்து வீட்ல இருக்கிறவங்களுக்கு கேட்கிற அளவுக்கு எப்படி சத்தமா வாமிட் பண்ணுதுன்னு!

மருமவ கண்ணும் மக வயித்துப் பேத்தி கண்ணும்!

'அப்படி என்னதான் அந்தக் கண்ணுல இருக்கோ... எப்போ பார்த்தாலும் கண்ணைச்சுத்தி மையைத் தடவி, புருவத்தைப் புடுங்கி... பொம்பளைங்களுக்கு என் பேத்தியா மாதிரி கண்ணு சின்னதா இருக்கணும். இப்படியா முண்டக்கண்ணி மாதிரி இம்மாம் பெருசா கண்ணை வெச்சிக்கிட்டிருக்கிறது..!'

- பாட்டி செஞ்ச சம்பவத்தை அறியாத மக வயித்துப் பேத்தி, 'அத்தை என் கண்ணு ரொம்ப சின்னதா இருக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க. உங்க கண்ணு மாதிரி பெருசா, அழகா இருக்க டிப்ஸ் கொடுங்களேன்'னு அவங்க முன்னாடியே கேட்க... அத்தையம்மா முகம் கும்மிருட்டுல செல்போன் டார்ச்சை பார்த்த மாதிரி சும்மா சுருங்கி... போச்..!

எங்க குடும்பத்துல எல்லாருக்கும் நீளமான முடியாக்கும்...!

'என் பொறந்த வீட்ல எல்லாருக்கும் சாட்டை மாதிரி தலைமுடி இருக்கும். வெள்ளிக்கிழமையானா முடியை குப்புறப்போட்டு துணி துவைக்கிற கல்லுலதான் கசக்குவோம்னா பார்த்துக்கோ..! இப்பதான் எல்லாம் கொட்டிப் போச்சு. உன் முடியும்தான் இருக்கே... பனங்கொட்டைக்கு சாயம் பூசுனா மாதிரி.'

- அடிக்கடி நடக்குற இந்த பெருமை பீத்தலுக்கு சொந்த ஊர்ல நடந்த ஒரு கல்யாணத்துல சூப்பர் ரிவ்விட்டூ நடந்துச்சு.

பந்தி முடிச்சதும், வெத்தலைப் போட்டுக்கிட்டிருந்த ஆல் மாமியார்ஸும் (மாமியாரோட உடன்பிறந்த, உடன்பிறவா சகோதரிகள்) அவங்கவங்க மருமகள்கள்பத்தி ரொம்ப பெருமையா பேசிக்கிட்டிருக்க (!) அதுல ஒருத்தங்க ரொம்ப கேஷுவலா 'என்னாடி , உன்னைய மாதிரியே ஒரு சாண் முடியோட மருமவளைப் பிடிச்சிருக்க... அப்படியே நம்ம பக்கமும் திரும்பி, 'கோவிச்சுக்காதே கண்ணு, நாங்கல்லாம் அந்தக் காலத்துல உன் மாமியாளை பனங்கொட்டை தலச்சின்னுதான் சாலியா கூப்பிடுவோம்'னு சிரிக்க, அம்மாம் பெரிய சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கி வைக்கிற கஷ்டத்தை... ஹா ஹா ஹா...

அத்தையும் அவங்க நாத்தனாரும்...

அத்தையைப் பார்க்க அவங்க நாத்தனார் வந்திருந்தாங்க. கூடவே அவங்க மருமகளும். காலையில இருந்து வொர்க் ஃபிரம் ஹோம்ல மல்லுக்கட்டிக்கிருந்தவளை ஓரக்கண்ணால பார்த்தபடியே நம்மாளு, 'உன் மருமக புடவைக்கட்டி எவ்ளோ லட்சணமா இருக்கா. சிலதும் இருக்கே... எப்போ பார்த்தாலும் தலகாணி உறையை (சுரிதார்தாங்க) மாட்டிக்கிட்டு கம்ப்யூட்டருக்குள்ளேயே தலையை விட்டுக்கிட்டு... ம்ஹும்!

கட்டுரையோட ஓப்பனிங்ல நான் சொன்ன 'கடவுள் இருக்கிறான்டா' மொமென்ட்' இந்த சம்பவத்துலேயும் நடந்துச்சுங்க. 'அட, என்னண்ணி இப்படி சொல்லிட்டீங்க? உங்க மருமக எழுதுன புத்தகம்தான் இப்போ அமேசான்ல எக்கச்சக்கமா வித்திட்டிருக்கு.

வீட்டுக்குள்ள ரைட்டர் மருமகளை வெச்சுக்கிட்டு குறைப்பட்டுட்டிருக்கீங்க'னு ஒரு போடு போட, தப்பிக்க வழி தெரியாத அத்தையம்மா 'என் மருமகள்னா சும்மாவா'ன்னு கர்வமா அசசு வழிய, நம்ம மனசுக்குள்ள அமைதியோ அமைதி!

- ஆ.சாந்தி கணேஷன்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com