தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'நெஞ்சம் மறப்பதில்லை பிரிந்த காதலின் தீராவலி'

தங்கள் பழைய காதலி குறித்து பேசுபவர்கள். “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா சார்?” என கேட்டுவிட்டு எனது கதையை கேட்காமல், அவர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
நினைவே ஒரு சங்கீதம்
நினைவே ஒரு சங்கீதம்டைம்பாஸ்

காதல் கதைகள் நிறைய எழுதுவதில் சில அபாயங்கள் உள்ளன. முதலாவதாக… எனது காதல் கதைகளில் வரும் கதாநாயகிகள் அனைவரும் என்னுடைய காதலிகள்தான் என்ற எண்ணத்துடன் எனது மனைவி என்னை சந்தேகத்துடன்… சில சமயங்களில் கண்ணீருடன் பார்ப்பாள். ஒரு நள்ளிரவில் ஒரு காதல் ஜோடி ஃபோன் செய்து, “உங்க ‘தீராக்காதல்’ புக்கு படிச்சுதான் சார் நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சோம். வீட்ல ஒத்துக்கல. ஓடி வந்துட்டோம். எங்களை உயிரோட கொளுத்துறதுக்காக தேடிகிட்டிருக்காங்க… உங்க வீட்டுக்கு வரட்டுமா சார்?” என்று கேட்டு அடிவயிற்றைக் கலக்குவார்கள்.

இதை விட எல்லாம் அபாயகரமானவர்கள்… மது அருந்திவிட்டு தங்கள் பழைய காதலி குறித்து பேசுபவர்கள். இவர்கள் பொதுவாக, “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா சார்?” என்று கேட்டுவிட்டு எனது கதையை கேட்காமல், அவர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். தனது ‘காதலி’ என்று ஒரு சுமாரான பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து அவள்தான் ‘உலக அழகி’ என்று சொல்லி… அதை நான் ஏற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார்கள்.

அடுத்து, “அவ கண்ணு இன்னும் கண்ணுலயே நிக்குது சார். என்னா கண்ணு? கண்ணுன்னா அதான் சார் கண்ணு. என் கண்ணே பட்டுரும். அப்படி ஒரு கண்ணு…” என்ற ஒரு ஸ்டேட்மென்ட்டுக்குள் ஆயிரம் கண்களைச் சொல்லும் அசாத்திய திறமைப் பெற்றவர்கள். “அப்ப அவ ஒண்ணு சொன்னா சார்… ஒண்ணு சொன்னா சார்…” என்று விடிய விடிய பேசிவிட்டு கடைசிவரையிலும் அந்த ‘ஒண்ணு…” என்ன என்பதை சொல்லாமலே சென்றுவிடுவார்கள். அப்படி ஒரு 82 வயது(ஆம். 82 வயதுதான்) காதலனை சமீபத்தில் சந்தித்தேன்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

விகடனில் வெளியான எனது ‘ஜெஸ்ஸி’ கதையைப் படித்துவிட்டு வீடு தேடி வந்தார். வந்தவர் நிறை போதையில் இருந்தார். என்னைப் பார்த்தவுடனேயே, “ஆறு மாசம் கழிச்சு உங்க லவ் ஸ்டோரியால மறுபடி குடிச்சேன்… நீங்க திருச்சிதானே?”
“ஆமாம் சார்…”
“அதான் உங்கள்ட்ட சொல்லணும்னு தோணுச்சு…”
“சொல்லுங்க சார்…”
“உங்க கதைய காலைல படிச்சதுலருந்து ஒரு ஃபுல்லு அடிச்சிட்டேன் தம்பி. இன்னும் மனசு அடங்கல… இங்க தம்மடிக்கலாமா?”
“மாடில அடிக்கலாம் வாங்க…” என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன். சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் நெடுநேரம் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தோர்.

அப்போது பக்கத்து வீட்டு டிவியிலிருந்து, “நெஞ்சம் மறப்பதில்லை…” என்று ஒலித்த பாடல் அவர் மனதை திறக்க வைத்தது. பழைய பாடல்கள் அளிக்கும் மனோநிலை மிகவும் அலாதியான ஒன்று. அவை, வெறும் பாடல்கள் மட்டுமே அல்ல. அது ஒரு மனிதனை, அவனது கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்கிறது. உண்மையில் பழைய பாடல் பிடிப்பதாகச் சொல்லும் பலரும் அந்தப் பாடல்களை முழுமையாக கேட்பதே இல்லை. ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பாட்டிலிருந்து விலகி, அந்தப் பாடல் சார்ந்த கடந்த கால நினைவுகளுக்குள் சென்றுவிடுவார்கள்.

சட்டென்று அவர், “அப்ப நான் திருச்சி காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன் தம்பி. எங்க ஊருலருந்து தினம் பாசஞ்சர் ட்ரெய்ன்ல திருச்சி வந்து போவேன். எங்க ஊருக்கு ரெண்டு ஸ்டேசன் தள்ளி, ஒரு அழகான பொண்ணு ஏறுவா. அழகுன்னா...” என்றவர் சில வினாடிகள் இடைவெளி விட்டு, “இதுவரைக்கும் நீங்க பாத்ததுலயே அழகான பொண்ணு யாரு?” என்றார். நான் யோசித்து, “ஒரு தடவை... ஒரு பேங்க் எக்ஸாம் எழுதிட்டு, ட்வென்ட்டி நைன்-ஸில வந்துட்டிருந்தேன். அப்ப ஒரு பொண்ணு... இருபது வயசு இருக்கும். பயங்கர அழகு. முன் சீட்டுல இருந்த ஒரு கைகுழந்தைகிட்ட, கண்ண விரிச்சு, கண்ண சுருக்கி, உதட்டப் பிதுக்கி, வித விதமா அழகு காமிச்சிட்டிருந்தா. அதாங்க நான் பாத்ததிலயே ரொம்ப அழகான பெண்.” என்றேன்.

“நான் சொன்ன பொண்ணு, நீங்க சொன்னப் பொண்ண விட ரொம்ப அழகா இருப்பா. அதோ பக்கத்து மாடில உக்காந்திருக்காரே ப்ளு சட்டை. அவரு ஒரு பொண்ண சொன்னாலும், அதை விட அவ அழகா இருப்பா. இந்த மாதிரி யாரு, எவளச் சொன்னாலும்.... அவங்கள விட அவ அழகுங்க. நான் சொல்றது புரியுதா தம்பி?”
“புரியுது... அவ்ளோ அழகு...”
“ம்.... பாவாடை தாவணி கட்டிகிட்டு, நெஞ்சுல புத்தகத்த அணைச்சுகிட்டு, ஃப்ரண்டோட ட்ரெய்ன்ல வந்து ஏறுனா, மொத்த கம்பார்ட்மென்ட்டும் அமைதியாயிடும். மொத நாள் பாத்தவுடனேயே காதல். மத்த பசங்க எல்லாம் அவளைப் பாத்து கமென்ட் அடிச்சுகிட்டே வருவானுங்க. நான் ஒரு வார்த்த பேசமாட்டேன். என்னத்த பேசணும்? ராணி தேவதை மாதிரி
ஒரு பொண்ணு எதிர்த்தாப்ல உக்காந்திருக்கா... அத அமைதியா பாத்துகிட்டு வராம, அதைப் பத்தி பேசறது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? நீங்க என்ன சொல்றீங்க?”
“ரொம்ப கரெக்ட்டுங்க.”

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

“கூட வர்ற ஃப்ரண்டுகிட்ட கூட அதிகமா பேசமாட்டா. ஏறி உக்காந்தவுடனேயே புக்க எடுத்து வச்சுப்பா. அவள்ட்ட ஒரு பழக்கம். படிக்க ஆரம்பிக்கிறப்ப ஜடையத் தூக்கி முன்னாடி போட்டுப்பா. படிச்சு முடிச்சவுடனே, முடி நுனியை ஒரு தடவை பிரிச்சுவிட்டு டைட்டா போட்டுட்டு, மறுபடியும் பின்னாடி தூக்கிப் போட்டுப்பா. ஒரு மாசம் பாத்து நான் கண்டுபிடிச்ச விஷயம் இது. ஆனா எவ்ளோ கவனமா படிச்சிட்டிருந்தாலும், காவேரி பாலம் வந்தவுடனே படிக்கிறத நிறுத்திடுவா. காவேரில தண்ணி ஓடினாலும், ஓடலன்னாலும், ஜன்னல்ல தாவாங்கட்டைய வச்சுகிட்டு, சின்னக் குழந்தை மாதிரி கண்ண விரிச்சு பிரமிப்பா பாப்பா. கண்ணாங்க அது? அகலமான கண்ணு... மீன் மாதிரி கண்ணுல்லாம் சொல்வாங்கள்ல... அந்த மாதிரியெல்லாம் இல்லங்க. இது வேற மாதிரி. அவ கண்ணுல... ஒரு இது... எப்படி சொல்றது?” என்று அவர் வார்த்தைகளுக்குத் தடுமாறினார்.
“உயிர்ப்பு...” என்றேன்.
“அதேதான்.. உயிர்ப்பு... என்ன ஒரு அருமையான வார்த்தை. அந்த உயிர்ப்பு அவ கண்ணுல இருக்கும். காவேரில கொஞ்சமா தண்ணி ஓடறப்ப ஒரு மாதிரி சோகமா பாப்பா. ஆடி மாசம் அணைத் திறந்து நெறயாத் தண்ணி ஓடறப்ப, குஷியா வேற மாதிரி பாப்பா. தண்ணியே இல்லாம மண்ணா கிடக்கறப்ப வேற மாதிரி பாப்பா. அவ கண்ணப் பாத்தே ஆத்துல எவ்ளோ தண்ணி ஓடுதுன்னு நான் கண்டுபிடிச்சுடுவேன் தம்பி...” என்றவரை நான் பிரமிப்புடன் பார்த்தேன். காவிரி மண்ணுக்கே உரிய தேர்ந்த ரசனையுடன், மனிதர் அந்தப் பெண்ணை அணு அணுவாக ரசித்திருக்கிறார்.
“அந்தப் பொண்ணு திருச்சி டவுன் ஸ்டேசன்லதான் இறங்குவா. ஸ்டேசன் வர்றதுக்கு முன்னாடி எந்திரிச்சு, தாவணி முனையை எடுத்து விட்டு ஒரு உதறு, உதறி மறுபடியும் இடுப்புல செருகிப்பா... அப்புறம் இடுப்புல கர்ச்சீப்ப செருகிட்டு இறங்கி போய்கிட்டேயிருப்பா....”
“நீங்க அந்த ஸ்டேசன்ல இறங்கமாட்டீங்களா?”

“இல்ல... நான் ஜங்சன். இப்படியே நாளு ஓடுச்சுங்க. சனி, ஞாயிறு வந்துச்சுன்னா, இந்த
கம்னாட்டிப் பசங்க ஏன்டா காலேஜ்க்கு லீவு விடுறானுங்கன்னு கடுப்பா இருக்கும். இவளப்
பாக்குறதுக்காகவே நான் லீவே போடமாட்டன்ங்க. அப்படியே எதாச்சும் வேலைன்னு
போடவேண்டியிருந்தாலும், ட்ரென்ல போய் அவளப் பாத்துட்டு. திரும்பி அடுத்த ட்ரெயின
பிடிச்சு ஊருக்கு வந்துடுவேன். அவ சிரிச்சான்னா வச்சுக்குங்க…” என்று அவர் அடுத்தடுத்த
சிகரெட்டுகளை பற்ற வைத்துக்கொண்டு, கண்கள் பளபளக்க, அந்தப் பெண்ணைப் பற்றி மகா
அற்புதமான ரசனையுடன் கூறிக்கொண்டிருந்தார். அந்த இரவு முழுவதும், அந்தப் பெண்ணைப்
பற்றி அவர் கூறுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
“அப்படியே மூணு வருஷம் ஓடிருச்சுங்க.” என்று முடித்தார்.
“இந்த மூணு வருஷத்துல நீங்க உங்க லவ்வச் சொல்லவே இல்லையா?”
“எங்கங்க... பயம். பாழாப் போற பயம். நிறைய நாள் லவ் லெட்டர்லாம் எழுதி எடுத்துட்டுப்;
போயிருக்கேன். ஆனா கொடுத்ததே இல்ல...”
“அவங்களுக்கு உங்களத் தெரியுமா?”
“என்னங்க தம்பி... மூணு வருஷமா ஒரே ட்ரெய்ன்ல போறோம். தெரியாம இருக்குமா?

“அப்புறம் அவங்கள பாக்கவே இல்லையா?”
“ம்ஹ்ம்.. அப்புறம் வேலை கிடைச்சு, மெட்ராஸ் வந்துட்டேன். கல்யாணம்... குழந்தைங்க...
தாம்பரத்துல வீடுன்னு ரொம்ப தூரம் வந்துட்டாலும், மனசுக்குள்ள தினம் தினம் காவேரி
ஓடிகிட்டேயிருக்கும். அவ ஜன்னல்ல முகத்தப் பதிச்சு... காவேரியப் பாக்குற காட்சி திரும்ப
திரும்ப வரும். போன வாரம் எங்கக்கா பேத்தி கல்யாணம்ன்னு திருச்சி போயிருந்தேன்” என்று
நிறுத்தினார்.
“அவங்கள கல்யாணத்துலப் பாத்தீங்களா?” என்றேன் ஆர்வத்துடன்.
“அதெல்லாம் இல்ல தம்பி. இதென்ன சினிமாவா? அவ கூட ஒரு ஃப்ரண்டு வருவான்னு
சொன்னன்ல? அவ இந்த கல்யாணத்துக்கு வந்திருந்தா. பையன் வீட்டுக்கு சொந்தமாம்.
இத்தனை வருஷம் கழிச்சும் அடையாளம் கண்டுபிடிச்சுட்டேன். பேசினப்ப ஒரு விஷயம்
சொன்னா…” என்றவரின் கண்கள் கலங்கியது.
“என்னங்க சொன்னாங்க?” என்றேன்.
“அந்த காவேரி பாலப் பொண்ணும் என்னை லவ் பண்ணாளாம்.” என்றவுடன் நான் பரபரப்புடன்,
“அவங்கள போய் பாத்தீங்களா?” என்றேன்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

“இல்ல…. போன வருஷம் இறந்துட்டாங்களாம்…” என்றவரின் தொண்டை அடைத்து பேச்சை
நிறுத்திய அவருடைய கண்களில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்தக் காதலும், பிரிவின்
துயரமும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் அந்தத் துயரத்தை அவரால் வார்த்தைகளில்
வெளிப்படுத்த முடியவில்லை. ஒரு காதலின் பெரும் துயரத்துக்கு முன்பு, உலகின் மிகவும்
பழமையான தமிழ்மொழி, வார்த்தைகள் கிடைக்காமல் பலவீனமாகிவிட்ட கணம் அது.
இந்தியா போன்ற ஜாதி, மத, அந்தஸ்து வேறுபாடு நிறைந்த தேசத்தில் அப்போதெல்லாம்
மனத்திற்குள் காதல் இருந்தாலும், அதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லி, கல்யாணம்
வரைச் செல்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால் எல்லோருக்குள்ளும் ஒரு சொல்லாத அல்லது
சொல்லித் தோற்ற காதலின் வலி எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. அது பரவலாக
பரிமாறிக்கொள்ள முடியாத அந்தரங்கமான வலி. காலம் காலமாக அந்த அந்தரங்க வலியின்
வடிகால்….. காதல் பிரிவு பாடல்கள்தான். இசையில் கரையும் துயரம் அது. அல்லது இசையில்
பெருகும் துயரம்.
தமிழ் சினிமாவின் மகத்தான காதல் பாடல்களுள் ஒன்று… 1963-ல் வெளிவந்த
‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்.
தமிழின் மகாகலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியின் அற்புதமான
பாடல்களுள் ஒன்று அது. அந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அது ஏற்படுத்தும் ஆழமான
காதல் சோக உணர்விலிருந்து மீண்டு வர நீண்ட நேரம் பிடிக்கும்.
முன்ஜென்மத்தில் இறந்த காதலர்கள் மறுஜென்மத்தில் இணையும் கதைதான் நெஞ்சம்
மறப்பதில்லை. இப்படத்தை எடுப்பது என்று முடிவானதும் இயக்குனர் ஶ்ரீதர் விஸ்வநாதன்-

ராமமூர்த்தியிடம், “படத்தின் பெயர் நெஞ்சம் மறப்பதில்லை. பாடலின் பல்லவி ‘நெஞ்சம்
மறப்பதில்லை’ என்றே துவங்கவேண்டும். அந்தப் பாடல் கேட்பவர்களின் நெஞ்சத்தில்
எப்போதும் இருக்கும்படியான ஹான்ட்டிங் ட்யூனாக இருக்கவேண்டும்” என்றார். சரியென்ற
விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அந்த ‘‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற இரண்டு
வார்த்தைகளுக்கு மட்டும் ஏறத்தாழ 250 ட்யூன்களை போட்டுக் காட்டினார்கள். ஆனால் எதுவும்
ஶ்ரீதருக்கு பிடிக்கவில்லை.
அப்படியே நாட்கள் ஓடின. அந்தப் பாடலை மட்டும் விட்டுவிட்டு ஶ்ரீதர் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். இடையிடையே ட்யூனுக்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் எதுவும் ஒத்து
வரவில்லை. இப்படியே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. படப்பிடிப்பும் முடியும் நிலைக்கு
வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அலுத்துப்போய், ஶ்ரீதரைத் தவிர மற்றவர்கள் ஒரு ட்யூனை
இறுதி செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அந்த ட்யூன் பிடிக்காத
ஶ்ரீதர் கோபித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். உடனே எம்எஸ்வி ஶ்ரீதர் வீட்டுக்குச்
சென்று, “வேற ட்யூன் போடுறோம்….. வாங்க…..” என்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து
வந்தார்.

அப்போது விஸ்வநாதன்-ராமமூர்த்தி வானொலியில் தற்செயலாகக் கேட்ட படே குலாம்
அலி கானின் ஒரு ஹிந்துஸ்தானி .இசைப்பாடல் ஒரு புது ட்யூனுக்கான தூண்டலை
அளித்தது. அந்த ட்யூன் ஶ்ரீதருக்கு மிகவும் பிடித்துவிட… கவிஞர் கண்ணதாசன் வரிகளை
எழுத….. ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட
அந்தப் பாடல் பிறந்தது..
. நெஞ்சம் மறப்பதில்லை பாடலின் ஆரம்பத்தில் வரும் பி.சுசீலாவின் ஹம்மிங்கே
நம்மை புற உலகிலிருந்து துண்டித்து, ஒரு காதல் உலகத்திற்குள் நம்மைத் தூக்கிப்
போட்டுவிடுகிறது. தமிழ் சினிமாப் பாடல்களில் இது போல காதலின் ஏக்கம், பிரிவு, தவிப்பு,
இயலாமை, துயரம், கனிவு, குழைவு….. என்று அத்தனையும் ஒன்றாக இழையும் ஹம்மிங்
மிகவும் அரிது. பல்லவியில் பி.பி.ஶ்ரீனிவாஸ், ‘நெஞ்சம் மறப்பதில்லை…………..” என்று
ஆரம்பிக்கும்போது கடைசி எழுத்தான லை-யில் ஒரு அழுத்தத்தை அளித்து, பின்னர் சற்று
இழுத்து அந்த ‘லை’யை முடிக்கும்போது, ‘லை’ என்ற அந்த ஒற்றை எழுத்தில் காதலின்
மகத்தான துயரத்தை நமக்கு கடத்தி விடுகிறார். பிறகு பாடல் வளர வளர….. அந்தப் பாடலின்
அற்புதமான இசையில் கரைந்துபோய், நேற்றைய காதலர்கள் தங்கள் காதல் காலத்தில்
மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்கள். மானசீகமாக
எம்எஸ்வி-ராமமூர்த்தி கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள். காலத்தால்
அழிக்கமுடியாத ஒரு காவிய சோகத்துடன் மனத்திற்குள் மீண்டும் மீண்டும் அந்த
வார்த்தைகளை உச்சரிக்கிறார்கள்.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்… உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை
என் கண்களும் மூடவில்லை

பெண் குரல்:
ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை……
ஆண் குரல்:

ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்
நெஞ்சம் மறப்பதில்லை…..

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com