தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

''ஏணி வழியே மேலே ஒரு குறும்புக்காரப் பெண்ணைப்போல ஏறிச் சென்றார். அதே நாளில் கீழே இறங்கியபோது ஓர் ராணியைப் பார்த்தேன்!'' என்று ஜிம் கார்ப்பெட் எழுதியிருக்கிறார்.
பழைய பேப்பர்
பழைய பேப்பர்டைம்பாஸ்

அத்தியாயம் 1: கென்யக் காடு... மர உச்சியில் தேனிலவு... இளவரசி எலிசபெத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் மரணமடைந்ததை உலகமே இந்நேரம் அறிந்து வைத்திருக்கும். 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தவர் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி என்ற எலிசபெத். 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மாட்சிமை தாங்கிய ராணியாக வீற்றிருந்தார் எலிசபெத்.

இவருக்கு பல சிறப்புகள் உண்டு. இங்கிலாந்துக்கு மட்டுமல்லாமல் 14 நாடுகளின் அரசியல் சாசனத்தின் படி அரசியாகவும் இருந்தவர். இங்கிலாந்தின் பிரதமர் தேர்விலும் இவரது பங்கு மிக முக்கியமானது. இவரது கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அப்போதிருந்தே உடல்நிலையில் சுணங்கிப் போனார்.

முன்பு முதுமையிலும் உற்சாகமாக வலம் வந்தவர், ரொம்பவே தளர்ந்து போனார். குடும்பத்தினரிடம் பேசக்கூட மனமில்லாமல் தனிமையில் இருந்தார். அதனாலேயே முதுமைக்கே உரிய நோய்களின் பிடியில் எளிதில் ஆட்கொள்ளப்பட்டார். மரணத்தைத் தேடித் தழுவிக் கொண்டார். ஒருவகையில் கடவுள் அவரை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். இன்று ராணியைப் பற்றி பல தளங்களில் அஞ்சலிக் கட்டுரையை பார்க்க முடிகிறது.

'கோமகள் பெருமாட்டி...செல்வச் சீமாட்டி' என்று ஆளாளுக்கு எழுதுகிறார்கள். நாமும் நம் பங்குக்கு டைம் பாஸில் எழுதாவிட்டால் தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்பதால் இதோ பரணில் கிடந்த பழைய பேப்பரை உதறி, நாசியில் தூசியேற நாம் சேகரித்த சில அபூர்வத் தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

சரியாக 70 வருடங்களுக்கு முன், 1952-ல் கென்யாவுக்கு அவர் இங்கிலாந்தின் இளவரசியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இருண்ட கண்ட ஆப்பிரிக்காவின் கானக உயிர்களின் புகலிடமாக இருந்ததே கென்யக் காடுகள் தான். ஒருவகையில் கென்யா தான் தென் அமெரிக்காவின் அமேஸான் போல 'ஆப்பிரிக்க அமேஸான்'!

'வாழ்க்கையை நீண்ட தேனிலவாக வாழப் போகிறோம்!' என்று திருமணமான புதிதில் வேடிக்கையாகச் சொன்னவர் எலிசபெத். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதை அடித்து உடைத்தவர்கள் இவர்கள். எங்கு அரசப் பயணம் சென்றாலும் தன் கணவர் இளவரசர் பிலிப்பையும் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். `கென்யக் கானகப் பயணம் அவர்களின் சிறந்த தேனிலவுத் தலம்' என அன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பழைய பேப்பர்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கென்யாவின் அடர்ந்த காட்டின் உள்ளே நியரி என்ற இடத்தில் 'மச்சான்' என்ற மர வீட்டில் தங்கியிருந்தனர். அந்த மர வீடு பெயருக்கேற்றார்போல நன்கு பருத்து, அகன்று, வரிகளேறி 130 வருட பழமையேறி இருந்தது. மிக உயரமான அந்த மரத்தின் உச்சியில் அழகான அந்த மரவீடு கட்டப்பட்டிருந்தது. 'ராயல் பேலள்' என்றார்கள் உள்லூர் வாசிகள்.

அந்த ராயல் பேலஸை உருவாக்கியவர் எரிக் ஷெர்ப்ரூக் என்ற இங்கிலாந்துக்காரர். ராணுவ அதிகாரியான அவர் தன் காதல் மனைவிக்காக இந்த ரொமாண்டிக்கான இடத்தை ரசித்து இழைத்து மரத்தில் கட்டினார். பிறகு அதை புகழ்பெற்ற ரிசார்ட் வீடாகவே மாற்றினார்.

யானை, சிங்கம், புலி, சிறுத்தை, காண்டாமிருகம் என அதி பயங்கர விலங்கினங்களை மரத்தின் மேலிருந்து அருகில் பார்க்கும் வித்தியாசமான அனுபவத்தை அந்த வீடு பலருக்குத் தந்து சிலிர்ப்பைத் தந்தது.

பழைய பேப்பர்
தொடர்: நான் நிருபன்... சொல்ல மறந்த சம்பவங்கள்! - 1

இந்தச் சூழலில் தான் 1952 பிப்ரவரி 3-ம் தேதி அங்கு தன் கணவருடன் வந்து தங்கினார் இளவரசி. 'மௌண்ட் கென்யா' மலையின் உச்சியில் உதிக்கும் சூரியனைத் தரிசிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்திருந்தனர்.

காமன்வெல்த் சுற்றுப்பயணமாக விமானத்தில் கிளம்பிய இந்த ஜோடி கென்யாவுக்கு வந்தது கண்டிப்பாக அரசுப் பயணத்துக்காக அல்ல. இதை தனது சுயசரிதையில் எழுதியிருந்தது ராணியோ இளவரசரோ அல்ல. அவர்கள் தங்கியிருந்த மரவீட்டுக்குப் பக்கத்தில் மற்றொரு காட்டேஜில் தங்கியிருந்த உலகப் புகழ்பெற்ற கானுயிர்க் காதலரும் இயற்கை ஆர்வலருமான ஜிம் கார்ப்பெட் தான். (ஆம். இவர் பெயரில் தான் இந்தியாவில் ஒரு தேசியப்பூங்கா தற்போது இருக்கிறது)

1952, பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலையில் விடிந்ததும், ஜிம் கார்ப்பெட்டை அந்த (அரச) காதல் தம்பதி தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவர் இங்கு தங்கியிருப்பதாக அதிகாரிகள் அந்தத் தம்பதிக்குச் சொல்லியிருந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு அந்த மர உச்சி வீட்டில் நடந்தது. அந்த ராயலான மரவீட்டில் அன்றைய தினத்தைக் கழித்த பிறகு ஜிம் கார்ப்பெட்டே வியந்து போனார்.

மரத்தின் கீழே நடமாடிய காண்டா மிருகம், யானைகளை தன் கேமராவில் படமாக்கியபடி இருந்தாராம் எலிசபெத். அன்றைய தினம் இங்கிலாந்து மன்னர் நோய்வாய்ப்பட்ட விஷயத்தையும் இளவரசியின் வாயிலாக ஜிம் தெரிந்து கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். அன்று இருட்டத் தொடங்கியதும் மெல்ல விடைபெற்று தன் காட்டேஜுக்கு 30 அடி ஏணியின் வழியாக, அந்தத் தம்பதி டார்ச் லைட் அடித்து வழியனுப்பி வைக்க, பத்திரமாக இறங்கி காட்டேஜ் வந்து சேர்ந்திருக்கிறார் ஜிம்.

அங்கிருந்து தன் சகாக்களோடு அந்தத் தம்பதி பாதுகாப்பாய் உறங்க வேண்டும் என்பதற்காக இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஜிம். அந்த இரவு ஒருவித அமானுஷ்யத்தோடுதான் கடந்தது.

பழைய பேப்பர்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

மறுநாள் அதிகாலை ஜிம்முக்கு ஒரு தந்தி வந்தது. 'இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்து விட்டார்' என்பதே அது. இளவரசி எலிசபெத் தன் கணவருக்கு முன்பாக எழுந்து காண்டாமிருகங்களை படமாக்கிக் கொண்டிருந்தார். கீழே இறங்கி வந்து காலை உணவு எடுத்துக் கொண்டபிறகு மேலே ஏறிச் சென்றிருக்கிறார் இளவரசி. அவர் ஓய்வாய் இருந்த தருணம் காத்திருந்து படியேறிப்போய், தந்திச் செய்தியை இளவரசியிடம் சொல்லியிருக்கிறார் ஜிம்.

கண்களில் கண்ணீர் வழிந்தோட அந்தத் தந்தியைப் பார்த்த இளவரசி அந்தத் துயரத் தருணத்திலும் உபசரிக்கத் தவறவில்லை என்று பகிர்ந்திருக்கிறார் ஜிம்.

''என் கண்களால் இளவரசியை அந்த மரவீட்டின் கீழே பார்த்தேன். ஏணி வழியே மேலே ஒரு குறும்புக்காரப் பெண்ணைப்போல ஏறிச் சென்றார். அவசர அவசரமாக இங்கிலாந்து செல்ல தன் கணவரோடு அதே நாளில் கீழே இறங்கியபோது அவர் நடையில் மாற்றத்தைப் பார்த்தேன். அப்போது ஓர் ராணியைப் பார்த்தேன்!'' என்று நூலில் எழுதியிருக்கிறார்.

ஆம். மறுநாள் 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக அரியணை ஏறினார்.

( தொடரும்..)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com