'நதியா எனும் ஆப்கானிஸ்தானின் புரட்சி மலர்!' - பழைய பேப்பர் கடை Epi 4

தாலிபான் வீழ்ச்சிக்கு பின், நதியா அங்கு எழுதிய கவிதைகளை புத்தகமாக வெளியிட்டார். புகையில் பூத்த பூக்கள் என்ற அப்புத்தகம் பரவலான வாசிப்பைப் பெற்று வருகிறது.
நதியா
நதியா பழைய பேப்பர் கடை

தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து திமிறி இரு மடங்காக எழும்! - இது இயற்பியல் விதி மட்டுமல்ல. உலக நியதி.  அப்படித்தான் வரலாற்றில் ஒரு சம்பவம் 1996-ல் நிகழ்ந்தது. தாலிபான்களையே தண்ணீர் குடிக்க வைத்த...பெண்களால் நிகழ்த்தப்பட்ட ஓர் சம்பவம்.

ஹேரத் என்ற நகரம் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இருக்கிறது. சில்க் ரூட் என்றழைக்கப்படும் பட்டுப்பாதையில் குறுக்கிடும் ஆப்கானிஸ்தானின் சற்றே செழிப்பான நகரம். நகருக்குத் தெற்கே பரோபாமிசஸ் மலைகளும், ஹரி ஆறு தந்த வண்டல் படுகையினால் செழிப்பான விளைநிலங்களும் அமையப் பெற்ற பகுதி. கலையும், இலக்கியமும் செழிப்பாக இருந்த பகுதி. ஆனாலும் என்ன செய்ய,  கந்தஹாரிலிருந்து 570 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும்  தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

ஹேரத் கல்வியறிவில் சிறந்த நகரமாக இருந்தாலும் 1995-க்குப் பிறகு கந்தஹார் வரை ஆக்கிரமித்த தாலிபான்கள் முழுக்க ஹேரத்தையும் ஆட்கொண்டனர். குரங்கு கையில் பூமாலை போல ஆனது அந்நகரம். 

தாலிபான்களின் முதல் டார்கெட்டே அங்கிருந்த மகளிர் கல்லூரி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை மூடியதுதான். கோ-எஜுகேஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது. கடுமையான விதிகளை இஸ்லாமிய சட்டங்கள் என்ற போர்வையில் அமல்படுத்தினர். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டனர்.

நதியா
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

நெய்ல் பாலீஷ் பூசியிருந்த ஒரு பெண்ணின் விரலை பொது இடத்தில் வைத்து வெட்டியதால் பெண்கள் வெளியே வர அஞ்சினர். யாரேனும் அப்படி வந்தால் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். எதிர்ப்புக்குரல் எழுப்பிய சிலர்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால், தைரியமான சில பெண்கள் புரட்சிகரமான ஓர் விஷயத்தை செய்யத் துணிந்தனர். மிகுந்த மன வலிமையும் மதி நுட்பமும்  அதற்குத் தேவைப்பட்டது.  தாலிபான் ஆட்சியாளர்களால் அவர்கள் தையல் பழக மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆடை நெய்வது பெண்களின் அடிப்படை வேலை என்று தாலிபான்கள் கருதினர். அதையே தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ள பெண்கள் ஒன்றுகூடி திட்டமிட்டனர். அவர்கள் உருவாக்கிய புத்திசாலித்தனமான... அதே சமயத்தில் ஆபத்தான திட்டம் என்ன தெரியுமா?

'கோல்டன் நீடில் சீவிங் ஸ்கூல்' (Golden Needle Sewing School) என்ற பெயரில் ஒரு பள்ளியைக் கட்டமைத்தனர். வாரம் மூன்று நாட்கள் அங்குகூடி தையல் கலையைப் பயில்வது,ம் பயிற்றுவிப்பதும் தான். நூற்றுக்கணக்கான பெண்கள் அப்படி அங்கு ஒன்றுகூடினர். ஓராண்டாக ரகசியமாக திட்டம் தீட்டி வெளியே லீக் ஆகாதவாறு பார்த்துக்கொண்டனர். 

நதியா
'தேசிய சினிமா தினம் - ரவி வர்மாவும் பால்கேவும்' - பழைய பேப்பர் கடை | Epi 3

புர்கா அணிந்து கொண்டு, கைகளில் நூல்கண்டு, துணி மற்றும் ஊசியோடு அந்தப் பள்ளியில் ஐக்கியமாயினர். துணிகளோடு துணிகளாக ஷேக்ஸிபியரில் ஆரம்பித்து தஸ்தாயெவ்ஸ்கி வரை அங்கு ரகசியமாக புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது. ஹேரத் பல்கலைக்கழக பெண் பேராசிரியர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானதால் இந்த ரகசிய புரட்சிப்படை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர ஆரம்பித்தது. அறிவாயுதம் ஏந்தினர் அந்தப் பெண்கள்.

விஷயம் வெளியே தெரிந்தால் படுகொலை செய்யப்படுவோம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததால் அவ்வளவு ரகசியம் காத்தனர். இவ்வளவுக்கும் அந்த தையல் பள்ளியின் அருகிலேயே தாலிபான்களின் படைப்பிரிவு ஒன்றும் இருந்தது. அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவ பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளை விளையாட விட்டு, உள்ளே தாலிபான் படையினர் பார்வையிட வரும்போது சமிக்ஞை கொடுக்கச் செய்து, அவசர அவசரமாக புத்தகங்களை ஒளித்து வைத்தும் போக்கு காட்டினர். 

கவிஞர் நதியா
கவிஞர் நதியாடைம்பாஸ்

ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற பெண் கவிஞர் நதியா அஞ்ஜுமான் அங்குதான் பேராசிரியர் முகமது அலி ரஹ்யாப்பிடம் பயின்று ரகசியமாய் தேர்வெழுதி பட்டம் பெற்றார். 2001-ல் தாலிபான் வீழ்ச்சியடைந்ததும், நதியா அங்கு எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

'கொல்-இ-துடி' (புகையில் பூத்த பூக்கள்) என்ற அந்தப் புத்தகம் இன்றுவரை ஆப்கானிஸ்தானையும் தாண்டி பரவலான வாசிப்பைப் பெற்று ஹிட்டடித்து வருகிறது. பாகிஸ்தானில் நதியாவுக்கென தனி வாசகர் வட்டமே உண்டு!

நதியா
தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

ஆனாலும், நதியா படுகொலை செய்யப்பட்டார். தாலிபான்களால் அல்ல. அவர்களைவிட மோசமான பழமைவாத சிந்தனை கொண்ட தன் கணவனால்! நதியாவின் புகழ் அவனை தொந்தரவு செய்ய ஒரு நாள் குடும்பச் சண்டையில் அடித்தே கொன்றுவிட்டான்.  தற்கொலை என்று ஆப்கானிஸ்தான் அரசு நதியா படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் இன்னும் நீதிப்போராட்டத்தை அவர் பெற்றோர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈரானில் அவர் வாழ்க்கையை படமாக எடுக்க போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இன்றும் நதியாவைப்போல பல பெண்கள் ரகசியமாக பெற்ற பட்டங்களோடு தாலிபான்களின் வல்லாதிக்கத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களில் எத்தனை நதியாக்கள் வெளியே தெரிவார்களோ...அல்லது காற்றில் கரைவார்களோ..?

வசந்தம் பிறக்குமா? 

(தூசு தட்டுவோம்..!) 

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com