பாஜக தலைவராக அண்ணாமலை - சாதனைகளும் சோதனைகளும்

'ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவர் கணுக்கால் அளவு தண்ணீரிலேயே கண்டபடி போட் ஓட்டலாம்' என்று நிரூபித்தது அண்ணாமலையின் அடடே சாதனை.
அண்ணாமலை
அண்ணாமலைஅண்ணாமலை

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. அவருக்கு முதலில் வாத்துகள். ஸாரி, வாழ்த்துகள் என்றுதான் டைப் அடிக்க நினைத்தேன். ஆனால் அண்ணாமலை என்றதும் டங் ஸ்லிப், ஸாரி மறுபடியும் ஸ்லிப் பாருங்க, விரல் ஸ்லிப் ஆகிவிட்டது.

கர்நாடகாவில் சிங்கம் போலீஸ், கிரிமினல்களை அலறவைத்தவர் என்றெல்லாம் அண்ணாமலை பற்றி ஏகப்பட்ட பில்டப்களைக் கேள்விப்பட்டிருந்தோம். 'பூமி' ஜெயம்ரவிக்கு முன்னோடியாக, 'கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த விவசாயி'யாக ஏகப்பட்ட ஆட்டுக்குட்டிகளுடன் போஸ் கொடுத்து இயற்கை விவசாயியாகவும் தமிழ்நாட்டுக்கு அவதார அறிமுகம் கொடுத்தவர்தான் அண்ணாமலை.

ஒரு சுபயோக சுபதினத்தில் பா.ஜ.வில் சேர்ந்து என்ட்ரி கொடுத்தார். சேர்ந்த முதல்நாளிலேயே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று உச்சரித்து பா.ஜ.க.வினர் பல்ஸ் எகிற வைத்தார். அடுத்தடுத்து பலமுறை டங் ஸ்லிப் ஆகிறதா, எதுவுமே தெரியாமல் உளறுகிறாரா என்று புரியாமல், அண்ணாமலை பிரஸ்மீட், பொதுக்கூட்டம், போராட்டம் என்றாலே, 'அட வடிவேலு இல்லாத குறையைப் போக்க வாராது வந்த சிரிப்பு போலீஸ்' என்றாகிவிட்டது.

'வல்வில் ஓரி - அவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர்' என்று அண்ணாமலை உளற,. 'அட வரலாறு தெரியாத வண்டுமுருகனா இவர்?' என்று தமிழ்நாடே ஜெர்க் ஆகிப் பார்த்தது. '1967ல் வீர சிவாஜி தமிழ்நாட்டுக்கு வந்தார்' என்று அண்ணாமலை பேச சிவசேனாவிலிருந்து சிவாஜிகணேசன் குடும்பத்தார் வரை அதிர்ச்சியாகிப் பார்த்தார்கள் அண்ணாமலையை. 'திமுகவுக்கு 360 டிகிரியில் இருக்கிறோம்' என்ற அண்ணாமலை பேச்சால் படித்த கணக்கெல்லாம் பலருக்கும் மறந்துபோனது.

வரலாறும் தகராறு, கணக்கில் பிணக்கு, அரசியலும் தெரியாது, பூகோளத்தில் பூஜ்ஜியம் என்று அண்ணாமலையின் பொது அறிவு புதிர்மூட்டை அவிழ்ந்துகொட்ட, 'இவரு எப்படி ஐ.பி.எஸ் ஆனாரு' என்று சொந்தக்கட்சிக்காரர்களே சொறிய ஆரம்பித்தார்கள் தலையை. 'ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார்' என்று உயிருடன் இருக்கும் ஆற்காட்டாருக்கு மலர்வளையம் வைக்க, ஆற்காட்டார் மகன் கலாநிதி வீராசாமி கடுப்புடன் ட்விட்டரில் பொரிந்து தள்ளினார். பதறிப்போன அண்ணாமலை 'மன்னிச்சூ' என்று வேகவேகமாக வெள்ளைக்கொடி ஆட்டினார்.

'அட இவரு ஐ.பி.எஸ் சிங்கம் இல்லைப்பா, சிரிப்பு போலீஸு' என்று தமிழ்நாடே அடையாளம் கண்டுகொண்டது அண்ணாமலையை. ஸ்டாலின் ஆட்சியில் எல்லாவற்றுக்கும் குழு அமைத்தால், 'முதல்ல அண்ணாமலை எப்படி ஐ.பி.எஸ் பாஸ் பண்ணாரு, அதைக் கண்டுபிடிக்க ஒரு கமிஷனைப் போடுங்க' என்று மத்திய அரசுக்கே தந்தியடிக்க தயாரானார்கள் பலபேர்.

'மேக்கேதாட்டூ அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து...' என்று முழங்கி உண்ணாவிரதம் உட்கார்ந்தார் அண்ணாமலை. ஆனால் கர்நாடகத்தில் இருப்பதோ பங்காளி பா.ஜ.க அரசு. இப்போது மேக்கேதாட்டூ பிரச்னை உச்சத்தில். மத்திய அரசும் தமிழகத்தைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை உண்ணாவிரதம் இருப்பாரா என்று பார்த்தால் அவர் ஏழெட்டு இட்லி சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல 'கர்நாடக அரசைக் கண்டித்த' நேரத்திலேயே 'ஐ ஆம் புரவ்ட் கன்னடிகா' என்று அண்ணாமலை பேசிய வீடியோவும் வெறித்தன வைரலானது. 'ஹானஸ்ட் ராஜ், கேப்டன் பிரபாகரனுக்குப் பிறகு நேர்மையான போலீஸ் அதிகாரி அண்ணாமலைதான். அவரைக் கண்டால் கர்நாடகாவில் ரவுடிகள் அலறுவார்கள்; கிரிமினல்கள் கதறுவார்கள்' என்று காவிக்கட்சிக்காரர்கள் கட்-அவுட் பில்டப்புகள் கொடுத்தார்கள்.

ஆனால் அண்ணாமலையோ தலைவரான நாள் முதல் ஊரில் உள்ள கிரிமினல்கள் லிஸ்ட்டை எல்லாம் எடுத்தார். எதற்கு? பா.ஜ.க.வில் சேர்த்து பதவி கொடுக்க. கஞ்சா வியாபாரிகள், ரௌடிகள், கிரிமினல்கள் என்று அத்தனைபேரையும் கட்சியில் சேர்த்தார். ஆக மொத்தம் ஐ.பி.எஸ் அதிகாரியும் கட்சியில் இருக்காரு, கிரிமினலும் கட்சியில் இருக்காங்க.

கூட்டிக்கழிச்சுப் பாருங்க, கணக்கு சரியா இருக்கும் என்கிறார்கள் காவிக்கட்சிக்காரர்கள்.

'ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவர் கணுக்கால் அளவு தண்ணீரிலேயே கண்டபடி போட் ஓட்டலாம்' என்று நிரூபித்தது அண்ணாமலையின் அடடே சாதனை. "ஸ்டாலின் ஆட்சியில் வெள்ளத்தில் சென்னையே மிதக்கிறது' என்று அண்ணாமலை படகு ஓட்ட, பின்னாலேயே நடந்துவந்து 'ஏலேலோ ஐலேசா' பாடினார்கள் காவி காமெடி சகபாடிகள். 'ரெடி ஆக்‌ஷன் டேக்' என்று போதாக்குறைக்கு போட்டோஷூட் வேறு.

பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர் காரமாய் கேள்விகேட்க கடுப்பான அண்ணாமலை, 'அறிவாலயத்தில் எவ்ளோ காசு வாங்கினீங்க. நானும் தர்றேன் ஆயிரம், ரெண்டாயிரம். பிப்பிலிக்கா பிளாக்கி' என்றார். ரௌடிகளையும் அடுத்த கட்சிக்காரங்களையும் பா.ஜ.க.வில் சேர்க்க ரேட் பேசுவார்ல, அந்த நினைப்புல பேசுறாரு விடுங்க என்று கட்சிக்கார்கள் சமாதானம் ஆனார்கள்.

தி.மு.க.வைக் கலைக்க என்ன செய்யலாம் என்று யோசித்து அண்ணாமலையின் ஐ.பி.எஸ் மூளை போட்டதுதான் பலே பிளான். 'துரைமுருகனின் தூரத்துச் சொந்தக்காரரைக் கட்சியில் சேர்த்துட்டோம்', 'உதயநிதியின் ஒண்ணுவிட்ட சித்தப்பா பையனின் பெரியம்மா மகன் வழிப்பேத்தியின் மாமாப் பொண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்', 'ஸ்டாலினின் எல்.கே.ஜி கிளாஸ்மேட் பேரனின் பெரியப்பா பையனைச் சேர்த்துட்டோம்' என்று கிக்கிபிக்கி கில்லாடி காமெடி செய்தார் அண்ணாமலை.

'குடும்ப அரசியலை இப்படித்தான் ஒழிப்பாரோ?' என்று குழம்பிப்போனார்கள் தாமரை பார்ட்டிகள்.

தி.மு.கவை ஒழிக்கிறேன் என்று அண்ணாமலை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து ஓரம்கட்டியது பா.ஜ.க சீனியர்களைத்தான். முதல் பலி கே.டி.ராகவன். கையும் களவுமாக கே.டி.ராகவன் வீடியோ வெளியாக, 'காட்டுங்க காட்டுங்க' என்று காட்டு காட்டு என்று தமிழகமே காவிக்கட்சியை காய்ச்சியெடுத்தது. எல்லாம் அண்ணனின் மாஸ்டர் பிளான் என்று அண்ணாமலை ஆர்மி மார் தட்ட, அடுத்து அண்ணாமலையின் ஆடியோவும் வெளியானது, ஆக மொத்தம் 'ஒளியும் ஒலியும்' வெளியாகி நாறிப்போனது.

'முருகன் காலண்டரில் மூசை வரைந்த மூணுவயது சிறுவனுக்கு எதிராகப் போராட்டம்' என்று வழக்கம்போல் பா.ஜ.க களமிறங்கினால், 'கே.டி.ராகவன் பூஜையறையிலேயே என்ன செஞ்சார் தெரியுமா?' என்று ஆளாளுக்கு கிடுக்கிப்பிடி போட, காலண்டர் அட்டை, தெர்மகோல் வேலையெல்லாம் மூலையில் சாத்துகிறார்கள் பா.ஜ.க.வினர்.

'கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்' என்று யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் அப்பாவுக்கே ஆப்புவைக்க, 'அவர் கறுப்புன்னா நான் அண்டக்காக்கா கறுப்பு திராவிடன்' என்றார் அண்ணாமலை. சொன்னதுபோலவே 'திராவிட மாடலை' சொந்தக் கட்சியிலேயே அப்ளை செய்தார். கே.டி.ராகவனில் தொடங்கிய ஆபரேசன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், மதுவந்தி என்று உக்கிரமானது. பிக்பாஸ் காயத்ரியே கடுப்பாகி அண்ணாமலையைக் கலாய்க்க, போனால் போகிறது என்று அவருக்கு மட்டும் ஒரு இத்துப்போன பதவியை பார்சல் கட்டினார். விருந்தோம்பல் பிரிவு, வெளிநாட்டுத் தமிழ் வளர்ச்சிப் பிரிவு, கொசு பேட்டுக்கு சார்ஜ் போடும் பிரிவு, கொத்து பரோட்டா பிரிவு என்று அண்ணாமலை அறிவித்த பதவிகள் எல்லாம் 'அடடே சிரிப்பு வருது' ரகம்.

அண்ணாமலை தலைவரான காலத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த ஓட்டு வாங்கி பிஜேபி ஃபேமஸ் ஆனது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. தனித்து நிற்கிறோம் உள்ளாட்சித் தேர்தலில் என்று பல தொகுதிகளில் பலத்த அடி வாங்கி டெபாசிட் பறிபோனாலும் 'நாங்கதான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி' என்று இல்லாத மீசையில் மண் ஒட்டலையே என்று மான் கராத்தே காமெடி செய்தார்.

'உங்க பேரைச் சொல்லித்தான் கார்த்திக் கோபிநாத் ஊர் முழுக்க வசூல் செய்கிறாரே?' என்று பிரஸ்மீட்டில் கேள்வி முளைக்க, 'அவர் யாருன்னே தெரியாது' என்ற அண்ணாமலை, இரண்டே மாதங்களில் 'கார்த்திக் கோபிநாத்துக்கு அநீதி, அப்பாவுக்கு போன் பண்ணினேன்' என்று அந்நியன் வேஷம் காட்டினார்.

இப்படி அண்ணாமலையின் ஓராண்டு காமெடிகளை எழுதினால், அது பா.ஜ.க. வாங்கும் வாக்குகளைவிட பத்தாயிரம் மடங்கு பக்கங்களைத் தாண்டும். வாரம் ஒருமுறை 'நாங்கதான் பிரதான எதிர்க்கட்சி' என்று அண்ணாமலை காமெடி வாய்ப்பாடு ஒப்பிப்பதும் அதிமுக செல்லூர் ராஜூ முதல் அன்புமணி வரை கைப்புள்ளை ஐ.பி.எஸ்ஸை அடித்து துவைத்து அனுப்புவதும் வாக்காளப் பெருமக்களுக்கு வாடிக்கை நிகழ்ச்சி.

லேட்டஸ்ட்டாக, 'மோடி ஒரு படிக்காத மேதை, தார் ஊத்தாத பாதை' என்று அண்ணாமலை உண்மையை உளறிவைக்க, போட்டோஷாப் சர்டிபிகேட்டை எடுத்து நாலு போடு போடலாமா என்று மோடியே கடுப்பிலிருக்கிறார். 'ஆகமொத்தம் ரெண்டு அக்யூஸ்ட்...சியர்ஸ்' என்று ராதாரவியும் தன் பங்குக்கு கொளுத்திப்போட, 'நீர் உயர வரப்புயரும்...தமிழ்நாடு என்றால் கடுப்பு உயரும்' என்று பல்லைக் கடிக்கிறது டெல்லி மோடி வட்டாரம். எதுக்கும் இன்னொரு தடவைதான் சொல்லிடறேன். வாத்துகள்...ஸாரி வாழ்த்துகள் அண்ணாமலை ஜி!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com