
விழுப்புரம் மாவட்டத்தில், முக்கிய நகராட்சியாக இருந்து வருகிறது திண்டிவனம். மொத்தமாக 33 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில்... நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 23 இடங்களை கைப்பற்றிய தி.மு.க., நகராட்சி சேர்மன் பதவியையும் தன் வசப்படுத்தியது.
9-வது வார்டு கவுன்சிலரான நிர்மலா சேர்மனாகவும், வி.சி.க-வை சேர்ந்த ராஜலட்சுமி துணைச் சேர்மனாகவும் இருந்து வருகின்றனர். நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனும் 8-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த நகராட்சியில் அண்மை மாதங்களாகவே சுமார் 13 தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படுவதில்லை என கூறி அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். மேலும், அமைச்சர் மஸ்தானின் மருமகனின் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 13 பேரும் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுக்கப்போவதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்தும் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் நிர்மலா மற்றும் துணைத்தலைவர் ராஜலட்சுமி மற்றும் சில தி.மு.க கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் தரப்பின் நிலைபாடு குறித்து பேசினர். அப்போது, நகரமன்றத் தலைவர் நிர்மலா பேசுவதற்கு மிகவும் தட்டுத்தடுமாறினார். கவுன்சிலரான அவரது கணவர் ரவிச்சந்திரன் அருகே அமர்ந்து சொல்லித் தருவதையும் திருப்பி சொல்ல முடியாமல் திணறினார்.
ஒருகட்டத்தில் ப்ளூட்டூத் கனெக்ட் பண்ணி கொடுத்திடவா என்றெல்லாம் கேட்டுப் பார்த்து விட்டார்கள். அப்போதும் அவர் பேச முடியாமல் திணற, "ஷ்ஷபா... முடியல; உன்னை பேச வைக்க நாங்க படுற பாடு இருக்கே..!" என்ற தொணியில், வேறு வழியின்றி அவரது கணவர் ரவிச்சந்திரனே பேட்டி கொடுத்திருக்கிறார்.
"சொந்த கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் தான் படுத்துறாங்கனா... நம்ம சைடு விளக்கத்தை கூட சொல்ல முடியாம இந்தம்மா வேற ரொம்ப படுத்துறாங்களே..." என்று கூட இருந்த கவுன்சிலர்களே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-அ.கண்ணதாசன்.